தவறிழைக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் கையாள வேண்டிய வழிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையொன்றை வெளியிடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 'ஆசிரியர்களின் கவனயீனம் காரணமாக இவ்வருடத்தில் மாத்திரம் இரு மாணவர்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. மேலும் பல மாணவர்கள் மனதளவில் உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர்' என்று கூறினார்.
மாணவர்களை கையாள வேண்டிய வழிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையொன்று கடந்த 2005ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட போதிலும் அது தொடர்பில் ஆசிரியர்களுக்கோ அதிபர்களுக்கோ எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை.
மேற்படி சுற்றறிக்கையில், மாணவர்களை கையாள வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, அவற்றையும் மீறி மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.
பாடசாலை மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான உரிய தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்படுமாயின் தலைமயிரை வெட்டுதல், செருப்பு மாலை அணிவித்தல் உள்ளிட்ட மாணவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத தண்டனைகளை ஆசிரியர்கள் வழங்க மாட்டார்கள் என்று ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார்.