அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்த முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதியொருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஒலுவில் உபதபாலக வீதியில் வசித்து வரும் மாணவி பிரத்தியேக வகுப்புக்காக முச்சக்கரவண்டியில் செல்வது வழக்கம். வழமையாக செல்லும் முச்சக்கரவண்டியில் சென்ற போது குறித்த வகுப்பு நடக்கும் இடத்தை நோக்கி செல்லாமல் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று ஊடாக ஆலையடி வேம்பு பிரதேசத்துக்கு சென்று நிலை தடுமாறி திரிவதை அவதானித்த வேறு முச்சக்கர வண்டிக்காரர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
மாணவியை கடத்தி சென்ற முச்சக்கரவண்டி ஆலையடி வேம்பில் இருந்து அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் நோக்கி சென்றுள்ளது. பின் தொடர்ந்து வந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சின்ன முகத்துவாரத்தில் வைத்து குறித்த முச்சக்கர வண்டியை மறித்து சாரதியை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட ஒலுவிலைச் சேர்ந்த 46 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியை விசாரணை செய்து வரும் அக்கரைப்பற்று பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியையும் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
