Friday, May 16, 2014

கட்டார் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் - இன்றைய தினகரனில் வெளியாகியுள்ள செய்தி

வெளிநாட்டில் தொழிலாளர்களை நடத்துவது குறித்து சர்வதேச கண்டனங்கள் வெளியாகியுள்ளதையடுத்து கட்டார் அரசாங்கம் தனது கரிசனைக்குரிய தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. 

பரிந்துரைக்கப்பட்டிருக்கும் புதிய சீர்திருத்தத்திற்கு அமைய தொழிலாளர் களுக்கான “அனுசரணையாளர்” முறை முற்றாக அகற்றப்படவுள்ளது. இதன்படி, கட்டாரில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அங்கிருக்கும் காலத்தில் சுயதொழில் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவராக இருப்பார். இதன்மூலம், வெளிநாட்டு தொழிலாளர்கள் தனது தொழில் வாய்ப்பை மாற்றவும் நாட்டை விட்டு வெளியேறவும் இருக்கும் சிக்கல்கள் தளர்த்தப்படும். 

கட்டாரின் தற்போதைய அனுசரணையாளர் சட்டமான “கெபாலா” முறை மூலம் தொழிலாளர் தனது வேலையை மாற்றுவது குறித்து தொழில் வழங்குனரின் அனுமதியை பெற வேண்டியுள்ளது. இது தொழில் ஒப்பந்தத்தில் உள்ளட க்கப்பட்டிருக்கும். 

கட்டாரின் தற்போதைய சட்டத்திற்கு நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அது குறித்து தொழில் வழங்குநரின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், புதிய சீர்திருத்தத்தில் உள்துறை அமைச்சினூடான தானியங்கி செயல்முறை ஒன்று அறுமுகப்படுத்தப்படவுள்ளது. 

எவ்வாறாயினும் இந்த பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான எந்த கால வரையறையும் நிர்ணயிக்கப்பட வில்லை. 

பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த தொழிலாளர் சீர்திருத்தங்கள் நாட்டின் சூரா கவுன்ஸில் சட்டவாக்க பிரிவின் ஆய்வுக்கு உட்பட வேண்டியுள்ளது. அதன் பின்னரே, அது சட்டமாக அங்கீகரிக்கப்படும். “இந்த சீர்திருத்தங்கள் விரைவில் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். எனினும், அதற்கான காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை” என்று உள்துறை அமைச்சின் மொஹமத் அஹமத் அல் அதீக் மேற்படி ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார். 

இந்த பரிந்துரைகள் நிறுவனங்கள் மற்றும் வீட்டு தொழிலாளர்கள் உட்பட கட்டாரின் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

புதிய சீர்திருத்தத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் வெளிப்படை தன்மை கொண்ட இலத்திரனியல் முறையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சம்பளம் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் உட்பட சிக்கல்கள் தவிர்க்கப்படுகிறது. அத்துடன் தொழிலாளர்களின் கடவுச்சீட்டை பறுமுதல் செய்து வைத்திருப்பதற்கான தண்டப்பணத்தின் தொகை 10,000 ரியாலிலிருந்து (3,58000 ரூபாய்) 50,000 ரியாலாக (17,90,000 ரூபாய்) அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனினும் தொழிலாளர்களை பாதுகாக்கும் புதிய சட்டங்களின் இயல்புபற்றி ஊடக மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகாரிகள் பதிலளிப்பதை தவிர்த்து வந்ததாக ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

எதிர்வரும் 2022ம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்த கட்டாருக்கு வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்தே அந்நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் சர்வதேச விமர்சனத்திற்கு உள்ளானது. உள்நாட்டின் பூர்வீகக் குடிகளின் குறைந்த சனத்தொகையுடன் கட்டாரில் 1.4 புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்கின்றார். இது நாட்டின் மொத்த சனத்தொகையில் 85 வீதத்துக்கும் அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுமான மற்றும் சேவை துறைகளில் பணி புரிகின்றனர். கட்டார் பிரஜைகளில் 14 வயதுக்கு மேற்பட்ட 10 வீதமானோர் மாத்திரமே இவ்வாறான தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளனர். 

வளைகுடா நாடுகளில் இருக்கும் கெபாலா முறை தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையில் பாரிய சமத்துவமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது என்று சர்வதேச மனிப்புச் சபை குற்றம்சாட்டியிருந்தது. 

உலகின் முன்னணி இயற்கை எரிவாயு ஏற்றுமதி நாடான கட்டாரில் தொழிற்சங்கங்கள் அமைக்க தடை இருப்பதோடு ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவோர் நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது. கட்டாரின் புதிய சீர்திருத்த திட்டம் எந்த பாதுகாப்பு உறுதியையும் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என்று சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு விமர்சித்துள்ளது. “புலம்பெயர் தொழிலாளர்களின் மரணம் மற்றும் காயம் ஏற்படுவதை நிறுத்துவதற்கான எந்த முன்னெடுப்பும் அறிவிக்கப்படவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Disqus Comments