Wednesday, June 25, 2014

வட்டரக்க விஜித தேரர் கைது - பொலிஸ் தகவல்

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொய் குற்றச்சாட்டை வழங்கிய காரணத்தினால் தேரர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

கடும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தேரர் இன்று வைத்தியசாலையிலிருந்து விடுதலையானதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொதுபல சேனா அமைப்பினரே தன்னை தாக்கியதாக வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்திருந்தார். 

விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள். 

அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் கிடக்கக் காணப்பட்டார். 

தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டதாக விஜித தேரர் கூறினார். 

ஆனால், தேரர் தனக்குத் தானே இந்தக் காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

Disqus Comments