சீனாவின் ஷாங்காய் நதிக்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஷாங்காயில் உள்ள பண்ட் நதிக்கரையில் புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக நேற்றிரவு மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் குவிந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு 35 பேர் பலியாகினர். மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர். நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயன்றபோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்ட் நதிக்கரையிலிருந்து ஷென் யி சதுக்கம் வரையில் கூட்ட நெரிசல் குவிந்திருந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான உரிய காரணம் கண்டறியப்படவில்லை.
கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பண்ட் நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டம் குவிந்தனர். இதனால் ஆபத்தை தவிர்க்கும் நோக்கத்தோடு வழக்கமாக நதிக்கரையில் நடத்தப்படும் 3டி லேசர் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தாண்டியும் நிகழ்ந்துள்ள இந்த விபத்து, புத்தாண்டு தொடக்கத்தில் சீன மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.