Sunday, January 4, 2015

கல்விப் பணியில் என்றும் மறக்க முடியாத நாமம் சேர் ராஸிக் பரீத்

ஸக்கியா ஸித்தீக்
(முன்னாள் ஆசிரியை)
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி
அறிஞர் சித்திலெப்பை அவர் களின் கல்வி மறு மலர்ச்சிப் பணிகளுக்கும் பக்கபலமாக நின்ற வாப்பிச்சி மரிக்கார் அவர்களின் அருமைப் புதல்வன் அப்துல் றகு மானுக்கும், ஈசுபுலெப்பை மரிக்காரின் சிரேஷ்ட புதல்வி ஹாஜராவுக்கும் ஏகபுதல்வனாக 29-12-1893 இல் ஸேர் ராஸிக் பரீத் அவர்கள் பிறந்தார்கள்.
மூன்றாவது வயதில் தாயை இழந்த இவர் தனது சகோதரி உம்மு றkனாவின் பம்பலப்பிட்டி இல்லத்திலிருந்து செல்வி பேர்டினன்ட் அவர்கள் நடத்திய கல்விக் கூடம் சென்று ஆரம்பக் கல்வி கற்றார். அறபு மொழியையும், புனித குர்ஆனையும் அல்மதுரஸதுல் ஸாஹிரா வில் கற்றுக் கொண்டார். பதினோராவது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து அறிவு ஞானங்களையும், சிறந்த மனப்பாங்குகளையும் பெற்றுக் கொண்டதுடன் கேம்பிரிஜ் ஜுனியர் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
1930களில் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை முஸ்லிம் சமுதாயத்திற்கு முன்வைத்த போது முஸ்லிம் சமுதாய த்தின் கடுமையான எதிர்ப்புக்கு முகம் கொடுத்தார். எனினும் தடைகளை எதிர்த்தவர்களுள் ஸேர் ராஸிக் பரீத் அவர்களும் ஒருவராவார். 1938- 1947 காலப்பகுதியில் சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களைத் தலைவராகக் கொண்ட அரச சபையின் கல்விக்குழுவில் கடமையாற்றிய இவர், கிராமப் புறங்களில் முஸ்லிம் பாடசாலைகளை நிறுவும் பணியை முன்னெடுத்துச்சென்று 288 கிராமப்புறப் பாடசாலைகளை நிறுவும் பணியில் வெற்றிகண்டார்.
1930 களிலிருந்து கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரி இஸ்லாமிய கல்வி கலாசார நடவடிக்கைகளின் மையமாக விளக்கிய போதும் அன்று பெண்களின் கல்வி நடவடிக்கைகளில் சீரான அமை ப்புக்காணப்படவில்லை. முஸ்லிம் சிறுமிகள் கல்வியில் ஆர்வம் கொண்டி ருந்த வேளையில் பெண் கல்விக்கு கைகொடுத்த ஸேர் ராஸிக் பரீத் பற்றி பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூ ரியின் ஸ்தாபக அதிபர் ஆயிஷா றவூப் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“முஸ்லிம் சிறுமிகளுக்கு ஒரு பாட சாலையை நிறுவுவதற்கு வழிகளைத் தேடி இலங்கைச் சோனக மகளிர் சங்கம் அல்லற்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு கை கொடுத்து உதவமுன் வந்தவர் ஸேர். ராஸிக் பரீத் அவர்களாவார். தனக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்தை நான்கு கட்டிட ங்களோடு கையளித்ததன் விளைவாக இரு ஆசிரியைகளுடனும், இருபது மாண வியருடனும் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட் டது. இங்கு வழங்கப்பட்ட ஆங்கில மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள் வதற்கு நாட்டின் நாலா புறமிருந்தும் பெண் பிள்ளைகள் வருகை தந்தமையால் விடுதி வசதியும் செய்யப்பட்டது” ஒவ்வொரு கல்வி கற்ற இளைஞனுக்கும், ஒவ்வொரு கல்வி கற்ற மகள் உருவாக வேண்டும் என்பது ஸேர் ராஸிக் பரீதின் நோக்கமாக இருந்தது.
பெற்றோர் தமது பிள்ளைகளுக்குக் கட்டாயமாக அறபு மொழி கற்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய இவர், முஸ்லிம் சிறார்கள் பயிலும் பாடசாலைகளில் அறபு மொழி கற்பிப்பதற்குப்பிரத்தியேக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை 1936 ஆகஸ்ட் 4 இல் முன் வைத்தார். அறபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களை மேற்பார்வை செய்வதற்கு அறபு மொழிக் கல்வியதிகாரிகளை நியமிக்க வேண்டுமென அரச சபையில் பிரேரணை முன்வைத்து வெற்றிகண்டார்.
மேலும் ஐந்தாம் தரத்தில் திறமைச்சித்தி பெறும் சிறார்களுக்கு புலமைப்பரிசிலும், இலவச விடுதி வசதியும் வழங்கப்பட வேண்டுமென்றும், முஸ்லிம் மாணவர் களுக்கு தனியான மத்திய மகா வித்தியாலயங்களும், விடுதி வசதிகளும் வழங்கப்பட வேண்டுமென்றும் அரச சபையில் பிரேரணை முன்வைத்தார். 1944 ஆகஸ்ட் 31 வரவு செலவுத் திட்ட உரையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய பிரதேசங்களுக்கு முஸ்லிம் மாணவர்களுக்காக நான்கு மத்திய மகா வித்தியாலயங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும், முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு சம்மாந்துறை அல்லது மருதமுனையில் மத்திய மகா வித்தியாலயம் அவசியம் என்றும் கொரிக்கை விடுத்தார்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம் ஆசிரியர், பயிற்சிக் கலாசாலைகளை நிறுவ வேண்டும் என்றும் 1937-08-31 இல் அரச சபையில் கொரிக்கை விடுத்துதன் விளைவாக 1941-11-1இல் அழுத்கமை தர்கா நகரில் பெண்களுக்கான ஆசிரியர் கலாசாலை நிறுவப்பட்டது.
இதே நேரத்தில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையும் நிறுவப்பட்டது.
மேலும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கான தனியான தொழிற்சங்கமொன்றை நிறுவும் பணியை முன்னெடுத்துச் சென்று 15-07-1953 இல் இதற்கான சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டு 01-08-1953 இல் கொம்பனித் தெரிவிலுள்ள அரசினர் பாடசாலையில் (இன்றைய அல் இக்பால் ம. வி) இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கு சுதேச மருத்துவக் கல்லூரியில் நீண்ட காலமாகக் கற்பி க்கப்பட்டு வந்த யூனானி மருத்துவப் பிரிவை மூடுவதற்கு 1947 இல் நிய மிக்கப்பட்ட ஆணைக்குழு முடிவு செய்தமையை ஸேர் ராஸிக் பரீத் கண்டித்து உரத்துப் பேசினார். தமிழில் விரிவுரை நடத்த விரிவுரையாளர் இல்லை என்பதைக் காரணங் காட்டியமை யூனானிப் பரிவை மூடி விடுவதற்கான திட்டமே என்பதை ஊகித்த இவர் பல்வேறு காரணங்களையும், உண்மைக ளையும் எடுத்துக் கோட்டினார். உண் மையான சேவை நோக்கத்தோடு சுதேச வைத்திய சேவையில் அங்கம் வகித்த இவரது இப்பணியின் மூலம் நமது நாட்டில் யூனானி மருத்துவத்துறை நிலைத்து நிற்கின்றது எனலாம்.
மேலும் தோட்டத் தொழிலாளரின் சிறார்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டி ருப்பதைக் கருணையோடு எடுத்துக் காட்டி அதனை நிவர்த்திக்க வழிசெய்யு மாறு சிபார்சு செய்தார். சிறார்களின் பூரண வளர்ச்சிக்குக் கல்வியும் போஷா க்கும் மட்டும் போதாது. விளையாட்டுப் பயிற்சிகள் அவர்களுக்கு அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு மல்யுத்தம், பிலியட்ஸ், ஸ்நூக்கர், உடற்பயிற்சிகள் போன்ற துறைகளில் இளைஞர்கள் பயிற்சிபெற வழிவகுத்தமை உலக பிலியட் சம்பியன் எம். ஜே. எம். லாபிர் போன்றோர் உருவாகக் காரணமாகியது. 1955-12-07 இல் மாளிகாவத்தைப் பிரதேச வாசிகளுக்காக ஒரு விளையாட்டு மைதானத்தை அமைக்க வேண்டுமென்று முன்வைத்த பிரேரணை திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் கல்லோயாத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நீர்ப்பாசன வசதிகளை நன்கு பயன்படுத்தவும், அப்பகுதி விவசாயிகளுக்கு விவசாயக் கல்வியும், பயிற்சியும் அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்தைக் கொண்ட சேர். ராஸிக் பரீத் அவர்கள் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஒரு விவசாயக் கல்லூரி அமைக்கப்பட்ட வேண்டுமென்ற பிரே ரணையை 1947-05-13 இல் அரச சபையில் முன்வைத்தார். அதே உரையில் முஸ்லிம் மகளிருக்கு அக்கரைப்பற்றில் ஒரு தொழில் நுட்பக் கல்லூரி நிறுவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் தமிழ் மொழிப் பாடசாலைக ளில் ஆரம்பத்தில் முஸ்லிம்களது கலா சாரத்தோடு இணைந்த நூல்கள் அரிதா கவே இருந்தன. இதனால் சோனக இஸ் லாமிய கலாசார நிலை யத்தின் மூலம் ஏ. எல்.எம். இஸ்லாயீல், எஸ். பி. சாமிநாதன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு ‘முஸ்லிம் பாலர் வாசகம்’என்ற நூலை வெளியிட்டார்.
றமழான் மாதத்தில் முஸ்லிம் மாணவர்கள் நோன்பு நோற்க வசதியாக பாடசாலைத் தவணை அட்டவணையில் நோன்புக் காலத்தை விடுமுறையாக்கித் தருமாறும், ஹஜ்ஜுப் பெருநாள் தின த்தை விடுமுறை தினமாக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டமை அவரது சமூக உணர்வை எடுத்துக் காட்டுகிறது.
இறுதிக் கால இவரது கல்வி உரை கள் பாத்திமா மகளிர் வித்தியாலயத்தில் ஒரு வைபவத்தில் ஆற்றிய உரையும், மிஹிந்து மாவத்தை முஸ்லிம் மகா வித்தியாலத்தில் ஆற்றிய உரையுமாகும்.
பண்டாரவளை ஸேர் ராஸிக் பரீத் மகா வித்தியாலயம், கண்டி ஸேர் ராஸிக் பரீத் கூட்டமண்டபம், ஸேர் ராஸிக் பரீத் பவுண்டேசன், கொழும்புக் கோட்டை இலங்கை சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் சேர் ராஸிக் பரீத் வீதி கொழும்பு பம்பலப் பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஹாஜரா மண்டபம் போன்ற இவரது நாமத்தை தினமும் நினைவு படுத்துவதாகக் காணப்படுகின்றன.
கொழும்பு நகர சபை உறுப்பினராக, சமாதான நீதிவானாக, அரசசபை அங்கத்தவராக , உள்ளூராட்சி நிர்வாகக் குழு அங்கத்தவராக, மூதவை உறு ப்பினராக, நாடாளுமன்றில் கொழும்பு மத்தி உறுப்பினராக, வர்த்தக அமைச்சராக, வெளிநாட்டுத்தூதுவராக சோனக இஸ் லாமிய கலாசார நிலைய தலைவராக என்றெல்லாம் பதவிகளை ஏற்று சமூகப் பணி புரிந்த ஸேர். ராஸிக் பரீத் அவர்கள் 23-08-1984 இல் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்.thinakaran
Disqus Comments