நான் எனது கடமையை செய்தேன்…
நீங்கள் உங்களது கடமையை செய்துள்ளீர்கள்…
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் தொகுதி உட்பட இந்நாட்டு முஸ்லிம் சமுதாயம் மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக தமது அதிகபட்ச எதிர்ப்பைத் தெரிவித்து மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக்குவதற்கு தமது முழுப்பங்களிப்பையும் செய்திருக்கிறது. அதனால் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் அரசாங்கமும் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்த முஸ்லிம் சமூகத்துக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது.
முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சியில் பங்குதாரராக இருந்த முஸ்லிம் தலைமைகள் அவர் அதிகாரத்தில் இருக்கும் வரை தேவையான அனைத்தையும் பெற்றெடுத்துக்கொண்டு, இறுதித் தருணத்தில் அவரை கைவிட்டுவிட்டு மாற்று அணிக்குள் புகுந்தது எம்மைப் பொறுத்தளவில் பிழையான நடவடிக்கையாகும்.
ஒரு ஜனாதிபதியோ, அரசாங்கமோ அதிகாரத்தில் இருக்கின்ற போது இன மற்றும் சமூக ரீதியான அநியாயங்களை செய்கின்றார்கள் என்ற நிலைப்பாட்டை எடுப்போமாயின் அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையிலேயே உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்.
ஆனால் அவ்வாறான முடிவை எந்த முஸ்லிம் தலைமையும் கடந்த ஆட்சியில் எடுத்திருக்கவில்லை. அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். அல்லது ஒரு பொதுவான காரணம் கூட இருக்கலாம்.
ஆனால் ஒரு ஜனாதிபதியோடு அல்லது அரசாங்கத்தோடு ஒப்பந்தம் ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கின்ற முஸ்லிம் தலைமைகள் கடைசி தருணத்தில் அந்த அணியை விட்டு பாய்ந்து, வேறு அணிக்கு செல்கின்ற போது இந்த நாட்டு முஸ்லிம் தலைமைகள் தொப்பி புரட்டிகள், காட்டிக் கொடுப்பவர்கள் என்ற பெயர் அரசியல் தலைமைகளுக்கு மாத்திரமல்ல சமூகத்திற்கும் பெற்றுக்கொடுக்கப்படுகிறது.
அதைத்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் வரலாறு இந்த நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் சற்று அதிகப்படியான வாக்குகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வழங்கிய சிங்கள சமூகம் இந்த பெயரை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்கனவே சூட்டிவிட்டிருக்கின்றது. இது வரலாறு நெடுகிலும் அழியாத தழும்பாக இருந்து கொண்டிருக்கப்போகிறது.
ஆனால் ஒப்பந்தம் ஒன்றுடன் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுடன் இருந்த முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும் அவ்வாறே இருந்து, சமூகம் இன்னொரு முடிவை (இன்று எடுத்திருப்பது போல்) எடுத்திருந்தால், நமது சமூகத்துக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் கலங்கம் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். அதுதான் தலைமைகளின் கடப்பாடும் கூட.
பெருந்தலைவர் அஷ்ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் பல சூழ்ச்சிகளுக்கும், இழி நிலைகளுக்கும் முகங் கொடுக்க நேர்ந்த போதும் தொடர்ந்தும் இறுதிவரை அந்த ஆட்சியிலேயே பங்குதாரராக இருந்த்தையும் பின்னர் தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் மாவனல்லை முஸ்லிம் - சிங்கள இனக்கலவரத்தை காரணம் காட்டி அரசாங்கத்திலிருந்து வெளியேறியதையும் இதற்கு உதாரணங்களாக கொள்ளலாம்.
இன்றைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூட, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை இடையில் கைவிட்டுவிட்டு தன்னோடு இணைந்த முஸ்லிம் தலைமைகள் தனக்கும் அவ்வாறானதொரு நெருக்கடி வருகின்ற போதும், அவ்வாறுதான் செய்வார்கள் என்ற ஒரு கணக்கை போட்டிருப்பார்.
ஆனால் எம்மைப் பொறுத்தளவில் ஒரு ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்துடனோ ஒப்பந்தம் அடிப்படையில் சேர்ந்து நமது சமூகத்துக்கு நாம் பெற்றெடுத்த அத்தனை வேலைத்திட்டங்களுக்கும் நன்றிக் கடனையும், நம்பகத்தன்மையையும் உரிய முறையில் பேணிப் பாதுகாத்தோம் என்ற திருப்தியுடன் இருக்கின்றோம்.
பணத்துக்காகவோ, பதவிகளுக்காகவோ விலை போகாமல் மன சாட்சியுடன் நடந்து கொண்டோம் என்று நாமும், எம்மை பார்த்துக்கொண்டிருப்பவர்களும் திருப்திப்படக்கூடிய நிலையையே உருவாக்கியுள்ளோம். அதே நேரம் முஸ்லிம் தலைமைகள் அனைவரும் அவ்வாறானவர்கள் இல்லை என்ற உணர்வையும் சிங்கள் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தினோம். இந்நிலையில் சமூகம் தனக்கு தேவையானதை முனைப்புடன் செய்து முடித்திருக்கிறது.
எனவே சமூகத்தின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதோடு எமது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகளையும் அதைவைத்தே தீர்மானிப்போம். எமது 17 வயதிலிருந்து பெருந்தலைவர் அஷ்ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடைய பாசறையில் வளர்ந்து அதனையே செயற்படுத்திக் கொண்டிருக்கின்ற எமக்கென்று ஒரு அரசியல் வழிமுறையை உருவாக்கியிருக்கின்றோம். அதன் அடித்தளம் என்பது நம்பிக்கை, நாணயம், கொள்கையில் உறுதி என்பதாகும். அற்ப பணத்திற்கோ, பட்டம், பதவிகளுக்கோ நாம் ஆசைப்பட்டதும் இல்லை; விலைபோனதுமில்லை.
எனவேதான் நமது சமூகத்தின் பெரும்பகுதி எமது நிலைப்பாட்டுக்கு எதிராக நின்றபோதும், எம்மை அற்ப வார்த்தைகளால் இழிவு படுத்தியபோதும், கொலை அச்சுறுத்தல் விடுத்த போதும், எமது கொள்கையில் உறுதியாக இருந்தோம். இந்த தேர்தலில் நமது சமூகத்தின் தீர்ப்பை அடுத்து நாம் ஆரம்பிக்கின்ற புதிய பயணமும் அவ்வாறானதாகவே அமையும். இன்ஷா அல்லாஹ்.
இந்நிலையில் எம்மைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சகோதரர்கள் எமக்கெதிரான எறிகணைகளை சற்று நிறுத்தி சிறிது நேரத்திற்காகவாவது நடுநிலையாக நமது இந்த நிலைப்பாட்டை ஆராய்ந்து பார்க்கும் படியும் எமது தனிப்பட்ட அரசியல் வரலாற்றை தெரிந்துகொள்ளும் படியும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நன்றி.
அன்புடன்,
கே.ஏ. பாயிஸ்.
நன்றி கற்பிட்டியின் குரல்
