"இந்தியாவுடனான உறவை மேம்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்"என்று இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் கட்சியில் இருந்து விலகி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா சுமார் 4.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேயை தோற்கடித்தார். ராஜபக்சேவைப் போல மைத்ரிபால சிறிசேனாவும் புத்த மதப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவையும் அவர் பெற்றிருந்ததே இந்த வெற்றிக்குக் காரணமாகும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வர்த்தகச் சந்தை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்ற மைத்ரிபால, ஊழலை வேரறுப்பதுடன், அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் ஜனநாயக சீர்திருத்தத்தைக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்தார். மேலும் "இந்தியாவுடனான எங்கள் உறவைப் பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்" என்றும் கூறினார்.
மேலும் அவர், "இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியம். ஆனால் அதேசமயம் நாங்கள் சீன முதலீட்டாளர்களுக்கு எதிரானவர்களும் அல்ல. சீனாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருப்போம்" என்றார். அதிபருக்கு இருக்கக் கூடிய அதிகபட்ச அதிகாரங்கள் குறைக்கப்படும் என்று தெரிவித்த சிறிசேனா இன்னும் 100 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல சீனா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடனான ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல்கள் உள்ளிட்ட பல ஊழல் குற்றங்களை விசாரிக்க உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
புதிதாக அதிபர் பதவிக்கு வந்துள்ள சிறிசேனா, வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தற்போது சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்துள்ள நிலையில் இருந்து நாட்டை சமநிலைக்குக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
