தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்கவுள்ளார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறுகிறது.
விழாவில், முதலமைச்சராக ஜெயலலிதாவுக்கு ஆளுனர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்றுக் கொள்வார்கள்.
இதேவேளை ஜெயலலிதா பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக சென்னை உயநீதிமன்றத்துக்கு முன்பாக நேற்று (22) வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளார் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய தோழமை அமைப்புகளை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மேற்கண்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது, கடந்த செப்டம்பர் 27 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி குன்ஹாவால் தீர்ப்பளிக்கப்பட்டு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டவுடன் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வன்முறையை, பேருந்து எரிப்பை, கடையடைப்பை கைகட்டி, வாய்ப்பொத்தி, ஐம்புலனடக்கி வேடிக்கைப் பார்த்த அதே பொலிசுதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்தும், பெண் தோழர்கள், குழந்தைகள் உள்ளட்டு அனைத்து தோழர்களையும் தர தரவென இழுத்து வேனில் ஏற்றியது.
66,000 கோடி ரூபாயை ஆட்டய போட்ட ஜெயலலிதா, மீண்டும் பல கோடிகளை சுருட்ட, எம்.எல்.ஏ கூட்டம் கூட்டுவதும், மீண்டும் முதல்வராவதற்கு அனைத்து ஆயத்தங்களை செய்து கொண்டுமிருக்கிறார்.
பதவியேற்பு விழாவிற்கு 7000 பொலிசை அனுப்பி பாதுகாக்கச் செய்யும் அதே பொலிஸ் தான் தோழர்களை குற்றவாளிகளைப் போல அடித்து வேனில் ஏற்றி கைது செய்கிறது என்றனர்.
