ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகவோ அல்லது கட்சியினரை காட்டிக்கொடுக்கவோ போவதில்லை என அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது அன்பான நண்பர்களே உங்களை காட்டிக்கொடுக்கவோ, உங்களுக்கு விரோதமாகவோ நான் செயற்படவில்லை. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வேறு எங்கும் செல்லமாட்டேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கவும் எனது வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பவித்ரா வன்னியாராச்சி கலந்து கொள்ளவில்லை.
இந்த கூட்டம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு தான் அதில் கலந்து கொள்ளவில்லை எனவும் பவித்ரா வன்னியாராச்சி தெளிவுப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கடுமையாக பணியாற்றியதாகவும் அவர் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையில் தனது வீட்டையும் பந்தயம் வைக்க தயாரானதாகவும் வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
