Monday, June 22, 2015

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அனல்காற்று, 141 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அனல்காற்று வீசியதில் 141 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்பக்காற்றால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சிந்து மாகாணத்தில் இதுவரையில் அனல்காற்றுக்கு 141 பேர் பலியாகி உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடல் வறட்சி மற்றும் மாரடைப்பு காரணமாக 5 பேர் தாட்டாவிலும், தார்பார்காரில் 4 பேரும் நேற்று உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிந்து மாகாணத்தின் முதல்-மந்திரி செயத் காயிம் அலி ஷாக் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிந்து மாகணத்தில் கராச்சி உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசரநிலையை பிரகடணம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. என்று கூறினார். 

அனல் காற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கையானது அதிகரித்துவரும் வேளையில், மருத்துவமனைகளுக்கு தடையில்லாத மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 

பாகிஸ்தானின் துறைமுகநகரான கராச்சியில் சுமார் 44 முதல் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது பதிவாகி வருகிறது. ரமலான் மாதம் தொடங்கிய வெள்ளிக்கிழமையில் இருந்தே கடும் வெப்பமானது அங்கு நிலவி வருகிறது. தொடர்ந்து கொளுத்தும் வெப்பமானது நீடிக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜின்னா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சேமி ஜாமாலி பேசுகையில், “எங்களது மருத்துவமனையில் அதிக அளவு உயிரிழந்தவர்கள் வயதானவர் மற்றும் வீடுகள் இல்லாதோர்கள் ஆவர், அவர்கள், மூச்சு திணறல், உடல் வறட்சி மற்றும் மாரடைப்பால் உயிரிழந்தனர்,” என்று கூறிஉள்ளார். 

கடும் வெப்பம் காரணமாக உடல்நிலை குறைவு (குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சோர்வும்) காரணமாக 48 மணிநேரங்களில் மட்டும் 100 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடும் வெப்பம் காரணமாக வீட்டில் அதிகநேரம் சடலத்தை வைக்க முடியவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை உடனடியாக எங்களிடம் கொண்டு வந்துஉள்ளனர் என்று கராச்சியில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அன்வார் காஸ்மி தெரிவித்துஉள்ளார். அதிகமாக இறப்பு காரணமாக இவ்வமைப்பும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Disqus Comments