Monday, June 22, 2015

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது பங்களாதேஷ் அணி

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக செயற்பட்ட பங்களாதேஷ் அணி தொடரை தன்வசப்படுத்தி வரலாறு படைத்திருக்கிறது.
பங்களாதேஷிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது போட்டியில் இந்தியா 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பங்களாஷே் அணிகள் இடையிலான 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று இடம்பெற்றது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ரஹானே, உமேஷ் யாதவ், மற்றும் மொகித் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அம்பதி ராயுடு, தவால் குல்கர்னி, அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டனர்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் தோனி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரோகித் சர்மா முஷ்பிகுர் ரஹ்மானின் பந்துவீச்சில் பூச்சியத்துடன் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் விராத் கோஹ்லி ஜோடி 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விராத் கோஹ்லி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அணித்தலைவர் தோனி களமிறங்கினார்.
எனினும் தவான் ஆட்டமிழந்ததும் இந்திய அணிக்கு சிக்கல் நிலை உரிவாகியது. அடுத்துக் களமிறங்கிய ராயுடுவும் பூச்சியத்துடன் ஆட்டமிழந்தார். பின்னர் கைகோர்த்த அணித்தலைவர் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் 5 ஆவது விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களைக் குவித்தனர்.
எனினும் அறிமுகப் பந்துவீச்சாளரான முஷ்பிகுர் ரஹ்மானின் பந்துவீச்சை இந்தியத் துடுப்பாட்ட வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியாது போகவே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. தோனி 75 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் முதல் இனிங்ஸில் இந்திய அணி 43.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதுடன். ஒன்றரை மணி நேரம் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதனால் 47 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
பந்துவீச்சில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடும் முஷ்பிகுர் ரஹ்மான் 10 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இது இவரது இரண்டாவது 5 விக்கெட் பெறுதியாகும். முதல் போட்டியிலும் இவர் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 38 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்மூலம் இந்தியாவிற்கு எதிரான தொடரை முதன்முதலாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது பங்களாதேஷ்.
அத்துடன் நேற்றைய போட்டியில் தவான் மற்றும் தோனி முதல் முறையாக ஒருநாள் போட்டி ஒன்றில் இணைப்பாட்டத்தை வழங்கியமை விசேட அம்சமாகும்.
மேலும் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் (புதன்கிழமை) இதே மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று பங்களாதேஷ் அணி வைட் வோஷ் முறையில் தொடரைக் கைப்பறுமா எனும் கேள்வி அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது
Disqus Comments