Thursday, July 9, 2015

குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.


குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் ரூ.20 லட்சம் நஷ்டஈடு கேட்டு அவர் தனது கணவருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

கலெக்டரிடம் மனு

குமரி மாவட்டம் தேவிகோடு அருகில் உள்ள மேல்பாலை பூம்பள்ளிக்கோணத்தைச் சேர்ந்தவர் சுனி. இவருடைய மனைவி மினி. இவர்கள் 2 பேரும் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் மினி கூறியிருப்பதாவது:–

குடும்பக்கட்டுப்பாடு

எங்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு ஜெபிஷா, ஜெனிபா என்ற மகள்கள் பிறந்தனர். இரண்டு மகள்கள் பிறந்ததைத் தொடர்ந்து நானும், எனது கணவரும் முடிவு செய்து 11–12–2013 அன்று இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டேன். மேலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால், தமிழக அரசின் உதவித்தொகை பெறவும் விண்ணப்பித்துள்ளோம்.

குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட காரணத்தால் இனி பிள்ளைப்பேறு எனக்கு இருக்காது என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் நான் மீண்டும் கருவுற்றேன். இதனால் 2–5–2015 அன்று கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பொது மருத்துவமனையில் வைத்து பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் அதே மருத்துவமனையில் மீண்டும் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துள்ளேன்.

ரூ.20 லட்சம் நஷ்டஈடு

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறாகவும், கவனக்குறைவாகவும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த காரணத்தால்தான் எனக்கு 3–வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் எனக்கு உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அதிக அளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 3–வது குழந்தைப்பேறு காரணமாக எனது உடல் அளவில் பெரும் ஆரோக்கிய கேடுகள் ஏற்பட்டுள்ளன. 3 பெண் குழந்தைகளின் குழந்தை வளர்ப்பு, கல்வி, திருமணம் என ஏராளமான செலவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. கூலித்தொழிலாளியான எனது கணவரின் ஒரே வருமானத்தை மட்டுமே நம்பி உள்ளோம்.

ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கு ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் கொண்டு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்கிட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மினி தெரிவித்துள்ளார்.
Disqus Comments