றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் மரணம், விபத்தினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு நேற்று திங்கட்கிழமை கொண்டுவந்தனர்.
பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகன், இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் இதற்கு முன்னர் கூறியிருந்தனர்.
அவருடைய மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல் உடைக்கப்பட்டு, விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, பாதங்கள் கழற்றப்பட்டு பாதங்கள் அசிட்டினால் ஊறவைக்கப்பட்டு, கூரிய ஆயுதத்தை கழுத்தில் ஏற்றி, மொட்ட ஆயுதத்தினால் தாக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
வெள்ளவத்தை முருகன் வீதியை வசிப்பிடமாக கொண்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், நாரஹேன் பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக அந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.
அவருடைய சடலம் மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் அன்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.