கூகுள் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கிடையில் வரலாற்று முக்கியத்துவம்மிக்க ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது.
முழு இலங்கையையும் வை-பை தொழில்நுட்பம் மூலமாக இணைக்கும், அனைவருக்கும் இணையம் என்ற அடிப்படை நோக்குடனான திட்டமொன்றுக்கான ஒப்பந்தமே அது.
இராட்சத பலூன்கள் ஊடாக வை-பை வழங்கும் ' கூகுளின் புரஜெக்ட் லூன் ' என்றழைக்கப்படும் மேற்படி திட்டமானது இலங்கையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் பறக்கும் மேற்படி பலூன்கள் கம்பியில்லா இணையத் தொடர்பை வழங்கக்கூடியன.
லூன்களானது நடமாடும் தொலைத் தொடர்புக் கோபுரங்களாக செயற்பட்டு பின் தங்கிய பிரதேசங்களுக்கும் இணையத்தை வழங்கும் மையமாக திகழும். இவை எந்தக் காலநிலையையும் தாக்குப்பிடிக்க க் கூடிய மூலகத்தினால் ஆக்கப்பட்டுள்ளது.
இதனூடாக பரிமாற்றல் செலவு குறைக்கப்படுவதால் , தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பாவனையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணையத் தொடர்பை வழங்க முடியும்.
இலங்கையில் லூன்
இலங்கை முழுவதற்கும் சுமார் 13 பலூன்களின் மூலம் நாடு முழுவதும் வை-பை தொழில்நுட்பம் மூலம் இணைய வசதியை வழங்கமுடியுமென கூகுள் குழு தெரிவிக்கின்றது.
இத்திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் நாடுபூராகவும் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் , சிறந்த வேகத்திலான இணையவசதியை பெற முடியும்.
கூகுளானது இதற்காக இலங்கையில் உள்ள இணையச் சேவை வழங்குனர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளது.
மேலும் உலகில் முதன் முறையாக முழு நாடும் இணையத்தால் இணைக்கப்படும் பெருமையை இலங்கை பெறவுள்ளது.