ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச இணையங்கள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்நிலையில், ஆபாச இணையங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை தொடர்கிறது…
இந்த மனு மீது அண்மையில் நடந்த விசாரணையின் போது, “நான்கு சுவற்றுக்குள் ஒரு தனிநபர் ஆபாச வெப்சைட்டுகளை பார்ப்பதை, சுப்ரீம் கோர்ட் தடுக்க முடியாது.
இது தனது அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என ஒரு நபர் நீதிமன்றில் முறையிட்டால் என்ன செய்வது” என்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வேண்டுமானால் எடுக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இருப்பினும், நீதிமன்றில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென ஆபாச இணையங்களை தடை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
பிரபலமாக உள்ள சுமார் 857 ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79ன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வோடபோன், எம்டிஎன்எல், ஆக்ட், ஹாத்வே மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இணையதள சேவை வழங்கு நிறுவனங்கள், உடனடியாக 857 ஆபாச இணையங்களையும் தடை செய்துவிட்டன.
கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “சனிக்கிழமை இரவு நான் பார்த்தபோது, திறக்கப்பட்ட இணையதளங்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திறக்கப்படவில்லை.
அவை ஒன்றுமில்லாத பக்கங்களாக வருகின்றன” என தெரிவித்தார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து எழுந்து வருகிறது.
முன்னணி ஆபாச இணையதளமான ‘போர்ன்ஹப்’ இணையத்தை உலகளாவிய அளவில், 14.2 பில்லியன் பேர் பார்வையிடுகிறார்கள். அந்த பார்வையாளர்களில், 40 சதவீதத்தினர் இந்தியர்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில், மிசோராம் மாநிலத்திலேயே இந்த இணையத்தை பார்ப்போர் அதிகமுள்ளனர், 2வது இடத்தில் டெல்லி உள்ளது.
கனடா-இந்திய நாட்டு ஆபாச நடிகையயான சன்னி லியோனையே அதிகம்பேர் போர்ன்ஹப் இணையத்தில் தேடுகிறார்கள் என அறியப்பட்டுள்ளது.
கூகுளிலும் அதிகம் தேடப்பட்ட நடிகையாக கடந்த ஆண்டு சன்னி லியோன் தேர்வாகியிருந்த நிலையில், ஆபாச இணையமும் அதனையே கூறுகிறது.
இதனிடையே, ஆபாச இணையங்களை முடக்குவது தனி நபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ஒரு பிரிவினர் சமூக வலைத்தளங்களில் ஆதங்கம் தெரிவித்துவரும் நிலையில், அரசு சிறந்த முடிவை எடுத்துள்ளதாக மற்றொரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
அரசியல் சாசனத்தின் ஆர்டிக்கிள் 21ன்கீழ் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்துக்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் இவ்வாறு நடப்பதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்த்து பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.