Thursday, August 13, 2015

பொதுபல சேனாவின் கொந்தராத்தை நிறைவேற்றிய முஸ்லிம்கள்...! - (காதா் முனவ்வர்)

(Cader Munawwer) 

அண்மையில் ஊடக மாநாடு என்ற போர்வையில் சில முஸ்லிம்  பெயர் தாங்கிகள் பொது பல சேனாவின் கொந்தராத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் மேல் அவதூறுகளை அள்ளிச் சொரிந்து, முஸ்லிம்களைக் கருவறுக்கத் திட்டம் தீட்டிச் செயற்படும் பொது பல சேனாவிடம் வாங்கிய பணத்துக்கு வக்கணை இல்லாமல் செயற்பட்டிருக்கிறார்கள். தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டே , முஸ்லிம் ஒருவர் செய்யக் கூடாத- செய்வதற்குப் பயப்படுகின்ற- செய்வதற்கு மனம் கூசுகின்ற வேலையைச் செய்து முடித்திருக்கிறார்கள். சக முஸ்லிம் ஒருவரைப் பற்றி மாநாடு கூட்டி அபாண்டங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் பொது பல சேனாவின் சூட்சுமமான சூழ்ச்சிக் கரங்களும்  இஸ்ரேல் போன்ற சியோனிசத்தின் அசிங்கமான அனுசரணைகளும் இருப்பதாகவே பெரும்பாலோனோர் கருதுகின்றனர்.



கடந்த காலத்தில் மகிந்த & கோத்தபாய ராஜபக்ஷக்களின் பூரண ஆசீர்வாதங்களுடன் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  பௌதீக மற்றும் உளவியல் தாக்குதல்களின் சூத்திரர்களாகவிருந்த  பொதுபல சேனா இயக்கம், முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடும் ரிசாத் பதியுதீனையே தனது எதிரிகள் பட்டியலின் முதலாமிடத்தில் வைத்திருக்கிறது. அத்தோடு, மூன்று பேர்களின் மேல் வஞ்சம் தீர்ப்பது போல் 'மூவரை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன்' என  ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மகிந்த குறிப்பிட்ட மூவரில் ஒரேயொரு முஸ்லிமும் ரிசாத் மட்டுமே. எனவே, ரிசாதை அழித்து, அவரை அரசியலிலிருந்து அகற்றுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மென்னியைத் திருகி, தொண்டையை  நசித்து, உரிமைக் குரலை அடக்கி விடலாம் என்ற ரீதியிலான அவர்களின் சிந்தனையின் வெளிப்பாட்டில் ஒன்றே, இந்த ரிஸ்வி ஜவஹர்ஷா, குவைதிர் கான் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளைக் கொண்டு நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாடு என்பதை இலகுவாக ஊகித்து விடலாம்.



சக்தி வாய்ந்த உலக முஸ்லிம்கள் 500 பேரில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட ரிசாத் பதியுதீனின் சக்தியை ஒழித்துக் கட்டும் வேலைத்திட்டம் சர்வதேச முஸ்லிம் விரோத அரசாங்கங்களிடமும் அமைப்புகளிடமும் இருக்கத்தானே செய்யும். அந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு எட்டப்பர்கள் தேவைப்படுவது ஒன்றும் வியப்பல்லவே. அந்த எட்டப்பர்களும் முஸ்லிம் பெயர்களைக் கொண்டிருந்தால் சதிகாரர்களுக்குக் கொண்டாட்டம்தானே. அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே ரிஸ்வியும் குவைதிர் கானும் இன்னும் சிலரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.



குருணாகல் மாவட்டத்  தேர்தல் மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் வரை அமைச்சர் ரிசாத் மீது நல்லபிப்பிராயம் கொண்டிருந்த, அவரோடு நட்புடன் பழகிய, தனது வீட்டிற்குக் கூட்டி வந்து விருந்து வைத்த ரிஸ்வி ஜவஹர்ஷாவுக்குத் தனது பெயர் வேட்பு மனுவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர்தானா ரிசாதிற்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது...? இது வேடிக்கையாக இல்லையா...? முஸ்லிம் விரோத சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக அதிகம் படிக்காத, மக்கள் செல்வாக்கை இழந்த குவைதிர் கான் செயற்படுகிறார் என்றால், படித்த சட்டத்தரணியும் மாகாண சபையொன்றின் உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷாவுமா துணை போவார்...? இது வடிகட்டிய  சுயனலத்தினதும் பழிவாங்களினதும் வெளிப்பாடல்லவா...?



சரி... இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்திருப்பதாகக் கூறும் குவைதிர் கான், அந்த முறைப்பாடு விசாரிக்கப்படும் முன்பே இப்படியொரு ஊடக மாநாட்டை அவசர அவசரமாகக்  கூட்டி, அதுவும் தேர்தலுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் முறைப்பாடு செய்வது ஏன் என்று புத்தியுள்ள எவரும் கேள்வி எழுப்பவே செய்வர். இதற்கான விடை மிகத் தெளிவானது. இந்தத் தேர்தலில் ரிசாதுக்கும் அவரது கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்துவதொன்றே இதன் நோக்கம் என்பது சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும். 



ஆனால்,  குற்றம் சுமத்துபவரில் பிரதானமானவரான குவைதிர் கான் எப்படிப்பட்டவர் என்பதை ஆராயாமல், அவர் சொல்வதையெல்லாம் அப்படியே நம்பி விடுவதற்கு இலங்கை மக்கள் ஒன்றும் மாங்காய் மடையர்கள் அல்லவே.



நமது மக்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். நமது மக்கள் எதனையும் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள்.நமது மக்கள் உண்மைகளுக்கும் பொய்களுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள். இந்த நாட்டில்  சகல உரிமைகளுடனும் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்று எண்ணுபவர்கள் நமது மக்கள்.



எனவே, நமது மக்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சியோனிச, யூத வெறியர்களின் திட்டங்களை முறியடிப்பார்கள். ரிசாத் மீது அநியாயமாகப் படர்ந்திருக்கும் பாசிசத்தின் வலைகளை அறுத்தெறிவார்கள்.சோடித்துச் சுமத்தப்பட்டிருக்கும் கட்டுக்கதைகளைக் காணாமற் போகச் செய்வார்கள். ஞானசாரவினதும்  அசின் விராதுவினதும் மகிந்தவினதும் கோத்தபாயவினதும் சூழ்ச்சிகளை வீழ்ச்சியடையச் செய்வார்கள்.  வஞ்சகர்களின் வாய்களுக்கு நிரந்தரப் பூட்டிடுவார்கள். சதிகாரர்களுக்கெல்லாம் மேலான சதிகாரனாம் வல்ல அல்லாஹ்வின் உதவியுடன் அனைத்துச் சதிகளையும் தகர்த்தெறிந்து அரும் சாதனை படைப்பார்கள். இந்தத் தேர்தலில் ரிசாத் பதியுதீனுக்கும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் மாபெரும் வெற்றியை நமது மாண்பு மிக்க மக்கள் பெற்றுக் கொடுப்பார்கள். இன்ஷா அல்லாஹ்...!  


Disqus Comments