மஹிந்த ராஜபக் ஷ விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததை உறுதிப்படுத்தும் சகல ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நாட்டுக்குள் புதிய இராச்சியத்தை உருவாக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மிகக்குறுகிய காலத்தில் மஹிந்த ராஜபக் ஷவின் பிரஜாவுரிமையும் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நான் முன்வைக்கும் காரணங்களை மறுப்பதானால் மஹிந்த என்னுடன் நேரடி விவாதத்துக்கு வரவேண்டும் எனவும் அவர் சவால் விடுத்தார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் நேற்று நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி வழங்கியதாக நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மஹிந்த தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் தான் நிரபராதி எனவும் நான் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தாகவும் மஹிந்த தரப்பினர் கூறுகின்றனர். ஆகவே உண்மை என்னவென்பதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டுள்ளது.
நான் குறிப்பிட்ட இந்த சம்பவம் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் முன்னர் டிரான் அலஸின் கோரிக்கைக்கு அமையவே நடந்துள்ளது. புலிகளுடன் ஏதேனும் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் வடக்கின் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டமாக இருந்தது. அந்த காலத்தில் டிரான் அடஸ் சி.பி.இ எனும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் மூலம் ஒரு சில தொலைபேசி நிறுவனங்களுடன் இணைந்து வடக்கு மற்றும் கிழக்கில் அவர்களது தொலைத்தொடர்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார். ஆகவே இந்த செயற்பாடுகளின் மூலமே புலிகளுடன் அவர் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்.
அவரிடம் 2007.02.12 அன்று பெற்றுக்கொண்ட வாக்கு மூலத்தில் இவை தெளிவாக பெறப்பட்டுள்ளது. அதில் பசில் மற்றும் எமில்காந்தன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் புலிகளுக்கு பணம் கொடுத்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக இருந்த காலகட்டமாகும். டிரான் அலசின் வீட்டுக்கு குண்டுத் தாக்குதல் நடத்தியவுடன் அவரும் மங்கள சமரவீரவும் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் இவை அனைத்தையும் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுக்களை அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மஹிந்தவோ அல்லது பசில் ராஜபக் ஷவோ மறுக்கவில்லை.
பிரபாகரன் 2005 நவம்பர் மாதம் தனது மாவீரர் உரையில் மஹிந்த ராஜபக் ஷ யதார்த்த பூர்வமான தலைவர் என குறிபிட்டுள்ளார். ஆனால் மஹிந்த எனும் நபர் எப்போதும் இரண்டு முகங்களை கொண்டவராவார். அவர் வெளியில் சொல்வதை அப்படியே செய்பவர் அல்ல. மஹிந்த அப்போதைய காலகட்டத்தில் தனது அமைச்சின் கீழ் ராடா எனும் நிறுவனத்தை இயக்கினார். ஜனாதிபதி செயலகத்தின் கீழ் டிரான் அலஸ் தலைமையில் ஒரு சிலரின் ஒத்துழைப்புடன் இந்த ராடா நிறுவனத்தை நடத்தி வந்தனர். 2005 ஆம் ஆண்டு டிரான் அலஸ் மற்றும் சிலர் கிளிநொச்சியில் புலிகளின் முக்கிய உறுப்பினரான கூவண்ணன் என்பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது சுனாமி நிவாரண வேலைத்திட்டம் ஒன்று தொடர்பில் பேசியுள்ளனர்.
சுனாமி நிவாரண வேலைத்திட்டம் முழுமையாக புலிகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த திட்டத்தின் மூலம் நிதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை ராடா நிறுவனம் செய்யவேண்டும் என மஹிந்த ராஜபக் ஷ கட்டளையிட்டுள்ளார். அதேபோல் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆரம்ப நிதியானது எண்ணூறு மில்லியன் ரூபாய்களாகும். ஆனால் இந்த செயற்பாட்டை அமைச்சரவையில் முழுமையாக வெளிப்படுத்தாது வீட்டத் திட்டம் என்ற பெயரில் அமைச்சரவை குறிப்பாக வெளிப்படுத்தியிருந்தார். இது அமைச்ச்சரவியின் அனுமதியை பெறவில்லை.
மேலும் 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து நான்கு தடவைகள் பகுதி பகுதியாக பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மாவிலாறு போராட்டம் ஆரம்பித்து விட்டது. ஆனால் அந்த சந்தர்ப்பத்திலும் புலிகளுடன் மஹிந்த தொடர்பு வைத்திருந்தார். நாம் இப்போது நடத்தியிருக்கும் விசாரணைகளின் படி இப்போதைக்கு 169 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே புலிகளுக்கு பகிரப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 157ஆம் சரத்தின் படி இலங்கைக்குள் வேறு இராச்சியத்தை உருவாக்க நினைக்கும்இ அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்இ அதற்கான நிதி உதவிகளை வழங்கும் யாராக இருந்தாலும் அவர்கள் உயர் நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் ஏழு வருடங்களுக்கு பிரஜாவுரிமை பறிக்கப்படும்.
தமது சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். ஆகவே மஹிந்த ராஜபக் ஷ மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் தாம் செய்த குற்றச்செயல்கள் தொடர்பில் நன்றாக தெரிந்திருந்தனர். அதேபோல் வடமாகாணத்தில் வாக்களிப்பை புறக்கணிக்கவே மஹிந்த புலிகளுக்கு பணம் கொடுத்ததார். அத்தோடு தம்மீது குண்டுதாக்குதல் மேற்கொள்ளாதிருக்கவே இரண்டாவது தடவை பணம் கொடுத்துள்ளார்.
அதாவது கோத்தாபய ராஜபக் ஷ மீது குண்டுத்தாக்குதல் நடத்திய பின்னர் புலிகளுக்கு எந்தவொரு பணப் பரிமாற்றலும் நடைபெறவில்லை. அதேபோல் இந்த சம்பவத்தின் பின்னர் குறுகிய காலத்துக்குள் மஹிந்த ராஜபக் ஷ டிரான் அலஸை கைது செய்து பயங்கரவாத குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேபோல் டிரான் அலஸ் புலிகளுக்கு வேலை செய்வதாக குற்றம் சுமத்தினார். புலிகளுக்கு பணம் வழங்க பயன்படுத்திய நிறுவனங்களின் தலைவர்களும் டிரான் அலஸும் நடந்த உண்மைகளை வாக்குமூலம் மூலம் தெரிவித்துள்ளனர். ஆகவே நாட்டுக்குள் புதிய இராச்சியத்தை உருவாக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டிவரும். இந்த விசாரணையின் மூலம் மிகக்குறுகிய காலத்தில் நாட்டின் பிரஜாவுரிமையை இழக்க வேண்டி வரும் அத்துடன் அவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். மஹிந்தவுக்கு உதவிசெய்த பாவத்துக்காக டிரான் அலசுக்கும் இந்த நிலைமை ஏற்படும்.
இந்த நாட்டு மக்களையும் இராணுவத்தையும் விடுதலைப் புலிகளுக்கு காவு கொடுத்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல் இந்த விடயங்கள் தொடர்பில் என்னுடன் விவாதத்துக்கு வரவேண்டும் என நான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு சவால் விடுக்கின்றேன். அவர் புலிகளுடன் முன்னெடுத்த வியாபாரம் மற்றும் அவை தொடர்பிலான ஆதாரங்கள் இப்போது எம்மிடம் உள்ளது என்றார்.