அம்பாறை மாவட்டம் கல்முனை நகரிலுள்ள வீதியொன்றுக்கு எம்.எஸ் காரியப்பரின் பெயரை அனுமதியின்றி சூட்டியதாக குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் ஆதரவாளர்களும், பகிரங்கமாக வீதியின் பெயரிடப்பட்ட கல்வெட்டை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
வீதிக்கு காரியப்பர் பெயர் சூட்டியதை எதிர்த்த ததேகூ
வீதிக்கு காரியப்பர் பெயர் சூட்டியதை எதிர்த்த ததேகூ
இன்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று சாத்தான்கேணி மைதானத்தில் நடைபெறுவதற்கு ஒரு சில மணித்தியாலயத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கல்முனை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சாத்தான்கேணி மைதானம் வழியாக பொதுச் சந்தைக்கு செல்லும் வீதிக்கு கல்முனை மாநகர சபையினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முதலியார் எம். எஸ். காரியப்பர் வீதி என தற்போது பெயரிடப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக குறித்த வீதிக்கு இந்த பெயரிடப்பட்டுள்ளதாக மாநகர சபை மேயருக்கு எதிராக தமிழ் தரப்பினரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அவருக்கு எதிராக கல்முனை நகரில் தமிழ் மக்கள் கலந்து கொண்ட ஆர்பாட்டமொன்றும் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தின பின்னரே குறித்த வீதியின் பெயரிடப்பட்ட கல்வெட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களில் ஒருவரான ஹென்றி மகேந்திரன் "மாநகரசபையில் எந்தவொரு தீர்மானமும் இன்றி, மாநகரசபை கட்டளைச் சட்டத்தை மீறி, இந்த வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளது, இது மாநகர முதல்வர் தன்னிச்னையாக எடுத்த முடிவு " என்றார்.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காதன் காரணமாகவே பொலிஸார் முன்னிலையில் இடித்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்
இது தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரை தொடர்பு கொண்டு அவரது கருத்தை பெற முயன்ற போதிலும் தொடர்புகள் கிடைக்கவில்லை.