இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வசப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்தியா மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இதில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையிலுள்ள நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கடந்த 28ம் திகதி கொழும்பில் ஆரம்பமானது.
இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் இந்தியாவைத் துடுப்பெடுத்தாட பணித்தது.
இதன்படி அந்த அணி அதிரடியாக ஆடி 312 ஓட்டங்களைக் குவித்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த நிலையில் 201 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதனையடுத்து 111 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.
அந்த அணி 274 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்படி இலங்கை அணி 386 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.
ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறிய இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குஷல் பெரேரா ஆகியோர் நிதானமாக ஆடி வலுசேர்த்தனர்.
பின்னர் குஷல் பெரேரா 70 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வௌியேற, பின்னர் வந்த வீரர்களும் வரிசையாக நடையைக் கட்டினர்.
ஒரு கட்டத்தில் மெத்தியூசும் 110 ஓட்டங்களைப் பெற்ற வேளை இசாந்த் சர்மாவின் பந்து வீச்சில் எல்.பி.டப்ளியூவானார்.
இதனையடுத்து சற்று முன்னர் 268 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால் அந்த அணி 117 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடர் 2-1 என இந்தியா வசமாகியுள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் அசத்தலாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
மேலும் இசாந்த் சர்மா 3 விக்கெட்டுக்களையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.