வைபர் என்ற பிரபல்யமான கையடக்கத் தொலைபேசி அப்ளிகேசனைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிரான தரப்புக்கைள ஒன்றி ணைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்திய ஊடக மொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
செய்மதித் தொலைபேசிகளை பயன்படுத்தி உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபர் தொழில்நுட்பத்தை ஊடறுக்கும் தொழில்நுட்பம் மஹிந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய அனைத்து தொடர்பாடல் வழிமுறைகளையும் ஊடறுத்து மஹிந்த தரப்பு ஒட்டுக் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைபரையும் ஊடறுத்து ஒட்டுக் கேட்டிருந்தால் நாம் இன்று உயிருடன் இருந்திருக்க முடியாது. வெளிநாட்டு சக்திகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் வெளிநாட்டு சக்திகள் வழிநடத்தியதாகவும் வெளியான தகவல்களில் உண்மையில்லை.
மஹிந்தவிற்கு எதிராக சிவில் சமூகம் எழுச்சி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே முனையில் போராட்டத்தை முன்னெடுத்தோம். இதன் காரணத்தினால் மஹிந்தவை தோற்கடிக்க முடிந்தது.
மஹிந்தவிற்கு நிகரான ஒருவரை தெரிவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டது.மிக நீண்டகாலமாக செயற்பட்ட காரணத்தினால் மைத்திரிபால சிறிசேன இதற்கு பொருத்தமானவர் என நாம் கருதினோம். எவரும் 100 வீதம் சரியானவர்கள் இல்லை என்ற போதிலும் மிகவும் பொருத்தமானவருக்கு ஆதரவளித்து பொது வேட்பாளராக நிறுத்தினோம் என்றும் கூறியுள்ளார்.