ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை தேடும் நோக்கில் புலனாய்வுத்துறையினரை குறிவைப்பதும், அவர்களை பலவீனப்படுத்தும் பாரிய அபாயத்திற்கான அறிகுறி என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த கருத்தை வெளியிட்டார்.
ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனமை தொடர்பில் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் 4 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பிரகீத் காணாமல்போனாரா அல்லது உயிரிழந்தாரா என தேடுவதற்கு மேலதிகமாக வேறு காரணங்களே இங்கிருப்பதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக ராணுவ அதிகாரிகளின் மனநிலையில் பின்னடைவு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்புகள் பற்றியும் அவர் விபரித்தார்.
பிரகீத் எக்னெலிகொட மற்றும் நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ரோஹிந்த பாசன ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தகவல்களை வழங்கும் ஒற்றர்களாக செயற்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் நிதி பங்களிப்பில் கொழும்பில் இருந்து செயற்பட்ட 'தேதுன்ன' என்ற பத்திரிகைக்கு அந்த ஊடகவியலாளர் பலவித தகவல்களை வழங்கி வந்ததாகவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.