2015 ஆம் ஆண்டின் முதல் 09 மாத காலப்பகுதிக்குள் 2,200 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களால் 36,050 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுள் 2,440 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றமை கவனித்துப் பார்க்க வேண்டியதொரு விடயமாகும். எனவே வீதி விபத்துக்களை குறைத்து அதன் மூலம் உயிரிழப்புக்களை குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களை குறைக்க வேண்டுமாயின் அது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். அத்துடன் வீதிப் பாதுகாப்பு தொடர்பில் புதிய சட்ட திட்டங்களையும் அமுலுக்கு கொண்டு வரவேண்டும் வீதி பாதுகாப்பு தொடர்பில் புதிய தேசிய கொள்கையை அமுல்படுத்துவது அவசியமாகும். இதற்கென நீண்ட கால திட்டமொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.