எலிகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமற் போனதால் எலியைக் கொன்றால் தலா 25 ரூபா பரிசாக வழங்கப்படும் என பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பெஷாவரில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அவை இருந்து வருகின்றன. எலிக்கடிக்கு உள்ளாகி குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, உயிருக்கே ஆபத்தாக விளங்கும் எலிகளைக் கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட எலிகளை சேகரிக்கும் பணியும், அவர்களுக்கான பரிசுத் தொகையை வழங்கும் பணியும் பெஷாவர் நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவை அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக எலிகள் புழக்கத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் பெஷாவர் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் மேற்கண்ட பரிசுத் தொகை நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது