சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி அரசியல் சார்ந்த பதவியாக இருக்கக் கூடாது.அது நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதவியாக இருக்க வேண்டும்.முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு கட்சி வேண்டும் என்ற நிலைமை மாறி இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி வேண்டும்;அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக ஒரு கட்சி வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது என்று சிறிலங்கா காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று [02-04-2016] தெரிவித்தார்.
அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்படாத-சமூகத்துக்காக உழைக்கின்ற அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் அந்நிகழ்வுகளில் மேலும் கூறியவை வருமாறு;
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நாம் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.எமக்குக் கிடைத்திருக்கின்ற அமைச்சுப் பதவிகளையும் நாம் ஆதரவு வழங்கி வரும் அரசையும் கொண்டு கிழக்கு மாகாணம் மாத்திரமன்றி நாடு முழுவதும் பாரிய அபிவிருத்திகளை நாம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளோம்.
கடந்த ஆட்சியில் எந்தவோர் அபிவிருத்தியும் செய்ய முடியாமல் நாம் தவித்தோம்.நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தோம்.அந்த வாய்ப்பு எமக்கு இப்போது கிட்டியுள்ளது.அதை நாம் துஷ்பிரயோகம் செய்யவில்லை.
சம்மாந்துறையில் நாம் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.எனது அமைச்சின் ஊடாக அதிகமான நீர் இணைப்புகளை வழங்குவதற்கு நாம் முயன்று வருகின்றோம்.அதேபோல்,சம்மாந்து றை நகரை அழகுபடுத்தும் திட்டத்திலும் நாம் குதித்துள்ளோம்.
இந்தவொரு நல்ல நிலையில்,எமது கட்சியைப் பிளவுபடுத்தும் சதித் திட்டங்கள் எமது கட்சியைச் சேர்ந்த சிலராலே அரங்கேற்றப்பட்டு வருகின்றன.aஇந்த மரத்தை எந்தச் சதிகளாலும் அழிக்க
முடியாது.இந்த கட்சி இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பு.அதை எவராலும் உடைக்க முடியாது.
ஒரு காலத்தில் இந்த சமூகத்துக்கு ஒரு கட்சி வேண்டும் என்று கூறினார்கள்.இன்று ஆளுக்கொரு கட்சி தேவை என்ற நிலைமை வந்துவிட்டது.அவர்கள் அமைச்சர்களாவதற்கு இந்தக் கட்சிகள் தேவைப்படுகின்றன.
இந்த நிலைமை சமூகத்துக்கு ஆபத்தானதாக அமையும்.பதவி ஆசை இல்லாத-சமூகப் பற்றுள்ள அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும்.
இந்தப் பதவி ஆசையால் இப்போது எமது கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.கட்சியின் செயலாளர் பதவி என்பது அரசியல் பதவியாக இருக்கக் கூடாது.அது நிர்வாகப் பதவியாக இருக்க வேண்டும்.இந்தக் கட்சியை நாம் இன்னும் மக்கள் மயப்படுத்த வேண்டும்.இது முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி.பல திருத்தங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.-என்றார்.