Sunday, April 10, 2016

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதால் ஏற்படும் தீமைகள் - சமூகவியல் பார்வை.

(ரஸீன் ரஸ்மின்) கொழும்பு கொலன்னால பிரதேசத்திற்கு புதிதாக பயணம் மேற்கொள்வோர் அந்தப் பிரதேசத்தில் பாரிய மலைத் தொடர்கள் காணப்படுகிறது எனக் கூறுவார்கள். அது மலைத் தொடர்கள் அல்ல. குப்பை மேடுகள்தான் பெரும் மலைத் தொடர்களாக காட்சியளிக்கிறது.

எனவே, 2026ஆம் ஆண்டில்; கொழும்பில் இருந்ததைப் போலவே புத்தளத்திலும் தற்போது பாரிய 
மலைத் தொடர்கள் காணப்படுகிறது என புத்தளத்திற்கு வருகை தருவோர் சொல்வார்கள்.

புத்தளத்தை அழகுபடுத்தும் நோக்கில் புத்தளத்திலுள்ள அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயற்படுகின்ற போது புத்தளத்தை குப்பை மேடாக ஆக்குவதற்கு அமைச்சர் ஒருவர் பிடிவாதமாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலன்னாவ மீதொடமுல்லயில் கொட்டப்படுகின்ற குப்பைகளை பிரத்தியேக ரயில் மூலம் புத்தளத்திற்கு கொண்டுவந்து கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறு புத்தளத்தில் திடக்கழிவு அகற்றும் மையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சி உருவாகி ஒருவருடத்தின் பின்னர் குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த திட்டத்தை புத்தளத்தில் முன்னெடுப்பதற்கு, மாகாண சுற்றாடல் அதிகார சபை, வடமேல் மாகாண சபை, வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் என்பன அனுமதி வழங்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.

புத்தளம் வண்ணாத்தவில்லுப் பகுதியிலுள்ள அறுவாக்காடு பிரதேசத்தில் சுண்ணாம்பு கற்கள் அகழ்வு செய்யப்படுகின்ற குழிகளிலேயே குறித்த குப்பைகள் கொட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

*இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்*

குப்பை கொட்டுவதற்கு திட்டமிட்பட்டுள்ள குறித்த பிரதேசத்தை அண்டியே வில்பத்து சரணாலயம் காணப்படுகிறது. இதனால் குறித்த சரணாலயத்திலுள்ள மிருகங்கள் குப்பையால் ஏற்படும் துர்நாற்றத்திற்கு அந்த பிரதேசத்தை சுற்றிவளைக்க ஆரம்பிக்கும்.

குறித்த பிரதேசத்திற்கு அருகில் கங்கைவாடி மின்பிடிக் கிராமமும் காணப்படுகிறது. எனவே, குப்பை மேட்டிற்கு வரும் மிருகங்களுக்கும், கங்கைவாடி மீன்பிடிக் கிராமத்திற்கும் இடையில் பாரிய முறுகல் நிலை தோன்றும் வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆத்துடன், குறித்த கிராம மக்கள் ஒரு குறிப்பிட்ட தாழ்வுப் பகுதியிலேயே இருந்து தமக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் அந்தப் பிரதேசத்தில் நீரில் ஒருவிதமான அசிட் தன்மை காணப்படுவதுடன், அந்த நீரை அருந்தும் மக்களுக்கு குறைபாடான பிள்ளைகள் பிறக்கும் வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கலாஓயா ஆற்றிலிருந்து புத்தளத்திற்கு குழாய் மூலம் குடிநீரை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதற்கான பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

எனவே, குப்பைகளை கொட்டுவதற்கு திட்டமிப்பட்டுள்ள குறித்த பிரதேசத்திற்கு அருகிலேயே கலாஓயா ஆறும் காணப்படுவதால் கலாஓயா ஆற்றின் நீரிலும் மாற்றம் ஏற்படும் எனவும் இதனாலும் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்ற திட்டத்திற்கு பெரும் தலையிடியையும் ஏற்படுத்தி விடும் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.

அத்துடன், கொழும்பிலிருந்து புத்தளம் பிரதேசத்திற்கு கொண்டுவரப்படவுள்ள குப்பைகள் ரயிலில் எந்தளவுக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்படும் என்ற ஒரு கேள்வியும், இதனால் முழுச் சுற்றாடலுக்கே அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சமும் பெரும்பாலானோர் மத்தியில் காணப்படுகிறது.

அத்துடன், குறித்த பகுதியில் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவது சுற்றுப்புறச் சூழலுக்கே பாரிய அச்சுறுத்தல் நிலவும் வாய்ப்பு உள்ளது என சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

*திட்டத்தில் சந்தேகம்*

பத்து வருட திட்டத்திற்கு 107 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், புத்தளம் பாலாவியிலிருந்து கறுவாக்காடு பகுதிக்கு பிரத்தியேக  ரயில் பாதையும் அமைக்கவும் அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு ரயில் மூலம் குப்பைகளைக் எடுத்து வரும் போது நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களிலும் குப்பை ஏற்றிவரும் ரயில் தரித்து நின்று வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதான் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்டோர் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு நகரத்தை அழகுபடுத்தவே அங்குள்ள குப்பைகள் புத்தளத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. அப்படியருக்க, குப்பை ஏற்றிவரும் ரயில் ஏன் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும். அப்படியானால், அந்த பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளும் புத்தளத்திற்கே அனுப்பப்படவுள்ளது.

எனவே, இது ஒரு குறுகிய காலத்து திட்டமாக இருக்க வாய்ப்பில்லை எனவும், நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கக் கூடிய திட்டமாக இருக்கும் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

*வடமேல் மாகாண சபையிலும் பிரஸ்தாபிப்பு*
இந்நிலையில் குறித்த திட்டம் தொடர்பில் வடமேல் மாகாண சபையின் இம்மாதத்திற்கான அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸினால் தனிநபர் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு கொழும்பிலுள்ள குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு வந்துகொட்டுவதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கொழும்பை அழகான நகரமாக்கும் போர்வையில் புத்தளம் மாவட்டத்தை குப்பைக் காடாக மாற்றுவதற்கு மாகாண சபை ஒருபோதும் இடமளிக்க் கூடாது எனவும் அவர் கேட்டுள்ளார்.

இன, மொழி, பிரதேசவாதம் என்பவற்றை தூக்கியெறிந்து விட்டு எமது மாவட்டத்தின், சமூகத்தின் எதிர்காலத்திற்காக எல்லோரும் ஒருமித்து குரல் கொடுப்பதன் மூலம் இந்த திட்டத்தை நிறுத்த முடியும்.

எனினும் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடமேல் மாகாண முதலமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை குருநாகலுக்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்தித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் மகஜரொன்றையும் வழங்கியுள்ளார்.


குப்பைக்கா அல்லது மக்களின் நலனுக்கா முக்கியத்துவம்

குப்பை கதையைக் கேட்கும் போது நுரைச்சோலை அனல் மின்சாரம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்  நுரைச்சோலை பகுதியில் அனல் மின்நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் குறித்த திட்டத்தினால் அந்தப்பிரதேச மக்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டு, மக்கள் நீண்ட காலமாக எதிர்ப்புக்களையும் தெரிவித்து வந்தனர்.

இறுதியில் மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி, நுரைச்சோலையில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதனால் ஒரு சிலருக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைத்தாலும், அதன் பாதிப்புக்களை இன்று அந்த பிரதேச மக்கள் அனுபவித்து வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

ஆகவே, அனல் மின்நிலையத்தைப் போலவா இந்த குப்பை பிரச்சினைக்கும் மக்களும், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் இந்த அரசு கடும் போக்குடன் நடைமுறைப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலனோர் மத்தியில்  எழுகின்றது.

*புத்தளத்து மக்கள் ஏமாந்தவர்கள் அல்ல*

புத்தளத்து மக்கள் அனல் மின்சார நிலையத்தில் இருந்து நல்ல பாடம் படித்திருப்பார்கள். அப்போது கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பவில்லை. காரணம், மஹிந்த அரசு அப்போது, புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளை அரச செலவில் சீனாவிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள அனல்மின்சார நிலையத்தின் செயற்பாடுகளை காண்பித்தது.

இதனால் அப்போது நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலும் கடுமையாக எதிர்க்கவில்லை. மக்களுடன் மக்களாகவும் இருந்தார்கள், மக்களின் பிரதிநிதிகளாக அரசுடனும் சேர்ந்துகொண்டு அரசுக்கு கூஜா தூக்கினார்கள். மஹிந்த அரசு என்பதால் அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு இரட்டை வேடம் போடவேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆனால், இது நல்லாட்சி என்பதால் அப்படியானதொரு தேவை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்காது என நினைக்கிறேன். தமது மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசக்கூடிய உரிமை வழங்கப்பட்டுள்ளது.

பசுமையாக இருக்கும் புத்தளத்தை மாசுபடுத்த அனுமதிக்கக் கூடாது. எனவே, கட்சி, இனம், மதம், மொழி வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மக்களின் நலனுக்காக மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமின்றி, சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் என அனைவரும் அணிதிரள வேண்டும் என்பதுதான் மக்களின் ஒரேயொரு எதிர்பார்ப்பாகும்.

வரும் முன் காப்போம், வந்த பிறகு கண்ணீர் வடிப்பதில் என்ன பிரயோசம் இருக்கிறது.
(மடவளை நியூஸ்)
Disqus Comments