அசாம் (09-04-16): சவூதியில் எனக்கு கிடைத்த கவுரவத்தை கண்டு சிலர் வெலவெலத்துப் போகின்றனர் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
அசாம் மாநிலத்தில் வரும் 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க நேற்று அசாம் வந்து ராஹா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது;
சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் நான் நட்பாக இருப்பதைப் பார்த்து இங்குள்ள சிலர் வெலவெலத்துப் போகின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் கூறுவது என்னவென்றால், உலகில் உள்ள அனைவருடனும் நட்பை ஏற்படுத்திக் கொள்ள என்னால் முடியும்.
சவூதி அரேபியாவில் எனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை கண்டு வெளியுலகிலுள்ள சிலருக்கு வயிற்றெரிச்சலை உண்டு பண்ணியுள்ளது. இது எதனால் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு நடுக்கம் அடைந்துள்ள முதல் மந்திரி தருண், தனக்கு உதவுவதற்கு டெல்லி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னால் இருந்துகொண்டு ஆட்டுவிக்கும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ சக்தியை யாருக்கும் நீங்கள் கொடுத்துவிடக் கூடாது என்றும் பேசினார்.