Sunday, April 17, 2016

பிள்ளை வளா்ப்பு பெற்றோர்கள் எதிா்நோக்கும் நவீன சவால். Dr. ரயீஸின் முக்கிய அறிவுறுத்தல்கள்

(JM - மீள்பிரசுரம்.) பிள்ளை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு தூரம் தமது பிள்ளைகளுடன் தொடர்பு படுகின்றனறோ அந்த அளவிற்கு அது நன்மை பயக்கும். கார்ட்டூன் நிகழ்ச்சிகளும் வீடியோ விளையாட்டுக்களும் பிள்ளைகளை நெறி பிரள்வுள்ளவர்களாக மாற்றும் என்று இலண்டன் ஹார்லி ஸ்டீர்ட் வைத்தியசாலையின் வைத்திய அலோசகரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் வைத்தியத்துறைப் பேச்சாளரும், வருகை தரும் விரிவுரையாளருமான சிறுவர் நோயியல் விசேட வைத்தியநிபுணர் கலாநிதி  எம்.எல்.எம்.ரயீஸ் தெரிவித்தார்.

மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் (7.3.2016) மடவளை அபிவிருத்திச் சங்கம் ஒழுங்கு செய்த சிறுவர் பராமரிப்பு தொடர்பான செயல் அமர்வு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். பெறுமளவு பொது மக்கள் பங்கு கொண்ட இச் செயலமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

சிறுவர் வைத்தியத் துறையில் எனக்கு 20 வருட கால அனுபவம் உண்டு. அதில் நான் பல்வேறு நாடுகளுக்கும் விஜயம் செய்து பலதரப்பட்ட பிரச்சினைகளையும் பற்றி கலந்துரையாடியுள்ளேன். இவ்வாறு நான் இதுவரை சுமார் ஒரு இலட்சத்து என்பதாயிரம் குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அல்லது எனது சேவையைப் பெற்றுள்ளனர். அதில் நான் கண்ட ஒரு  முடிவு மட்டுமல்லாது சில ஆய்வு முடிவுகளின் படியும் இலண்டன் போன்ற இடங்களுடன் ஒப்பிடும் போது எமது  நாட்டுப் பெற்றோர்கள் தமது குழந்தைகளுடன் தொடர்புபடும் அளவு மிகக் (இன்வோல்) குறைவாகும். ஆனால் ஏனைய நாடுகளில் அது அதிகமாக உள்ளது. அதாவது இயன்றவரை பிள்ளைகளுக்கு சமீபமாக வேண்டும். அவர்களுடன் ஒட்டி உறவாடும் அளவிற்கு அவர்கள் திறமைசாலிகளாக முடியும். இதனால் அவர்களது பலத்தையும் பலவீனத்தையும் பெற்றோர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

பூமியில் நாம் வாழ்வதென்றால் கண்டபடி எமக்கு வாழ முடியாது. அதற்கு ஒரு விதிமுறை உண்டு. அந்த விதி முறைப்படி நாம் முயற்சி செய்ய வேண்டும்.  நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வினைத் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் எமது பிராத்தனைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

திருமறையில் இறைவன் குறிப்பிடுகின்றான் கண் குளிர்ச்சியான ஒரு குடும்பத்தை காண வேண்டுமாயின் நல்லடியார்களுக்கு (முத்தகீன்களுக்கு) தலைமை தாங்கக் கூடியவர்களை உருவாக்கப் பிராத்தனை புரிய வேண்டும் என்று. எனவே  நாம் நல்லடியார்களின் தலைவர்களை உருவாக்க வேண்டும். எமது பரம்பரையில் உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதற்காகப் பிராத்தனை புரிய வேண்டும். அப்படியான தலைமைகள் வெறுமனே வரமாட்டாது. நாம் அப்படியான தலைமைகளை உருவாக்கப் பாடுபட வேண்டும்.

இன்று ஒரு பாரிய சமூகப்பிரச்சினையாக இருப்பது கார்ட்டுன் பார்ப்பதும் வீடியோ விளையாட்டில் ஈடுபடுவதுமாகும். இதனை யாரும் பெரிதாக நினைப்பதில்லை. சாதாரணமாக தொலைக்காட்சிகளில் போகும் கார்ட்டுன் படங்கள் பாரிய திட்டத்தின் அடிப்படையில் பல கோடி டொலர்களை முதலீடு செய்து சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் ஒரு பாரிய முயற்சியாகும். இதன் பின்னணி மிகப் பயங்கரமானது. எந்த ஒரு கார்ட்டூனும் தற்செயாக மேற்கொள்ளப்படுவதில்லை. அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒரு நோக்கை அடைய எடுக்கும் முயற்சியாகும். 

உதாரணத்திற்கு ஒரு பூனை எலியைப் பிடிப்பதை மையமாக வைத்து ஒரு கார்ட்டூன் இடம் பெறுகிறது. மேலோட்டமாக இதில் எதுவித பாதகமும் தெரிவதில்லை. ஆனால் அந்தப் பூனை எலியைப் பிடித்து கொன்று சாப்பிடுவதில்லை. என்ன என்ன சிரமங்களை கொடுக்க முடியுமோ அவை அத்தனையையும் அந்த எலிக்குக் கொடுத்து இறுதியில் அது சிரித்து மகிழும். இதுதான் அதில் தொடராகவரும் விடயமாகும். 

இதன் உற்கருத்து நீங்கள் சிரிக்க வேண்டுமா? அல்லது உங்களுக்கு மகிழ்ச்சி தேவையா அதற்காக மற்றவரை நோவினை செய்ய வேண்டும் என்ற தகவலை அது கொடுக்கிறது. எனவே போதைக்கு அடிமையாவது போல் சிறுவர்கள் இந்த கார்டுனுக்கு அடிமையாகி மற்றவரை துன்பப்படுத்தி மகிழும் நிலைக்கு மாற்றப் படுகிறன்றனர். இதன் விளைவுகளாக எத்தனையோ கொலைகளை உலகம் சந்தித்துள்ளது. இன்று எல்லா இடத்திலும் அதுதான் நடக்கிறது. பூவை கசக்கி பின்னர் நுகராமல் வீசி எரிவதில் அக மகிழ்ச்சிகாண்கி;னறனர். இது எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமைகளும் இதன் தாக்கமாகும்.

ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமாயின் அவர்களை கொலை செய்து குவிக்கத் தேவையில். அவர்களது கல்வியை அழித்தால் போதும். அவர்கள் இயல்பாகவே தம்மைத்தாமே அழித்துக் கொள்வர். ஏழாம் நூற்றாண்டு முதல் உலகில் வல்லரசாகவும் மேன்மை கொண்டவர்களாகவும் முஸ்லிம் சாம்ராஜ்யம் இருந்தது. இன்று வானிலை ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தும் நவீன பிலனட்டேரியங்கள் பல உண்டு. ஆனால் உலகில் முதலாவது பிலனட்டேரியம் அல்லது வானிலை ஆய்வு நிலையம் அன்று பேசியாவில் (பாரசிகக் குடாவில்) அமைக்கப்பட்டிருந்தது. அதனை இன்றும் கூட காணலாம். ஆனால் அதில் விசேடம் என்ன வென்றால் அந்த ஆய்வுமைய உச்சியில் பள்ளிவாயல் ஒன்று இருந்தது. அதாவது அன்று வாழ்ந்த அம்மக்கள் விண்வெளி ஆய்வையும் பள்ளியில் மேற்கொண்டனர் என்பதேயாகும். 

இதன் காரணமாக அவர்கள் உலகிலும் மறு உலகிலும் உயர்ந்த ஸ்தானத்தை பெறும் பாக்கியம் பெற்றார்கள். ஆனால் அன்று வேறு பராக்குகளில் இஸ்லமிய கிலாபத் செல்ல முயற்சித்தது. அன்றுடன் கிலாபத்தும் வீழ்ந்தது. 1923ம் அண்டளவில் துருக்கியின் வீழ்ச்சியுடன் இஸ்லாமிய கிலாபத்தும் வீழ்ந்தது. 

வெளிநாடுகளில் காளை மாட்டுச் சண்டை ஒன்றை மேற்கொள்வார். அது ஆரம்பிக்கமுன் ஒரு சிவப்புக் கொடியை அந்தக்காளை மாட்டுகளுக்குக் காட்டியதும் அவை ஒன்றுடன் ஒன்று மோத ஆரம்பிக்கும். இதே தத்துவம் இன்று எமது வாழ்கையிலும் பிரயோகிக்கப் படுகிறது.

காளை மாட்டுக்கு சிவப்புக் கொடி காட்டுவது போல் உலகில் ஏதாவது ஒரு புதுப்புரளியை எடுத்துப் போடுவர். அப்போது முஸ்லிம் நாடுகள் கொதித்தெழுவார்கள். ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு தம்மை தாமே அழித்துக் கொள்கின்றனர். இது நீண்ட திட்டத்தின் அடிப்படையில் நடந்து இன்று முஸ்லிம் உலகம் முழுவதும் மோதலை ஏற்படுத்தி கூத்துப்பார்க்கின்றனர். கல்வி அறிவு இல்லாமற்போனதன் ஒரு விளைவு தான் இது. எனவே துருக்கியில் இஸ்லாமிய வல்லரசை வீழ்த்த அணு குண்டு போடப்பட வில்லை. அவர்களை கல்வியை விட்டும் தூரமாக்கினர். அணுகுண்டு பாவித்திருந்தால் குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமே அழிவு ஏற்பட்டிருக்கும்;. ஆனால் ஒரு சாம்ராஜ்யமே இன்று அதனால் அழிந்தது. மேலும் அழிந்து கொண்டே போகிறது. இது பல வருடங்களுக்கு அல்லது யுகங்களுக்கு நீடிக்கலாம்.

இன்று ரெஸ்லின் என்று ஏற்கனவே ஒத்திகை பார்த்து திட்டமிட்ட அடிப்படையில் ஒரு கற்பனை விளையாட்டைப் புகுத்துகிறார்கள். அதில் ஒவ்வொரு அசைவும் ஏற்கனவே திட்டமிட்ட படியே நடக்கிறது. இதனை உண்மை என்று நினைத்து சிலர் அதற்கும் அடிமையாகி உள்ளனர். அதிகமானவர்கள் இன்று கறிகட் போட்டிகளைப் பார்ப்பதில் அடிமையாகி விட்டார்கள். சிலநாடுகளில் உதைப்பந்தாட்டத்தைப் பார்ப்பதில் அடிமையாகி விட்டார்கள். கிறிகட் அல்லது புட்போல் இருப்பது நாம் உற்கார்ந்து பார்ப்பதற்கல்ல. நாம்விளையாடுவதற்கு. அதனை தவறாகப் புரிந்து வைத்துள்ளோம்.

இலங்கை முஸ்லிம்கள் மொத்த சனத் தொகையில் 10 சதவீதம். ஆனால் நீரிழிவு நோயாளர்களது எண்ணிக்கையில் முஸ்லிம்கள் 23 சதவீதமாக உள்ளனர். ஏன் இது. எமக்குக் காட்டித் தரப்பட்ட வாழ்கை முறைப்படி வாழ்ந்தால் சராசரி 10 ஆக இருக்கலாம் அல்லது அதிலும் குறைவாக இருக்கலாம். ஏன் பூச்சியமாகக் கூட இருக்கலாமே. நாம் உணவிற்கு அடிமைப்பட்ட ஒரு சமூகமாக மாறிவிட்டோம். முதலில் இரவு 6 மணியுடன் தாய்மார்கள் சமயலறைப் பக்கம் போவதை நிறுத்த வேண்டும். நிறுத்தி விட்டு டிவீ பார்ப்பதல்ல. பிள்ளைகளுடன் சேர்ந்து கல்வி விடயங்களை கவனிக்க வேண்டும். உங்களுக்கு உயர்ந்த கல்வி அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்களும் அவர்களுடன் அமர்ந்து அவற்றை அவதானிக்க வேண்டும். ஆனால் முழுக்குடும்பமும் ஒன்றான அமர்ந்து கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்த்து பொன்னான நேரத்தை மண்ணாக்குவதை விபரிக்க முடியாது.

பொதுவாக நாம் நித்திரைக்குச் செல்வதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன் இலத்திரனியல் உபகரணங்களை மூடிவிட வேண்டும். அப்படியாயின் மட்டுமே உளவியல் ரீதியான ஆழ்ந்த நித்திரை ஏற்படும். அப்படி அல்லாத பட்சத்தில் நித்திரைக்குச் செல்வதற்கு ஒரு சில நிமிடங்கள் வரை இலத்திரனியல் உபகரணங்களுடன் பழகுவீர்களாயின் உங்களது நித்திரையில் முதல் இரண்டு மணித்தியாலங்களும் உண்மையான நித்திரையாக இருக்காது. கண்மூடியிருந்தாலும் தூங்குவதாக நினைத்தாலும் உளவியல் அடிப்படையில் அங்கு சரியான நித்திரை இருக்காது.

உலக மக்களில் கல்வியை பல பிரிவுகளாகப் பிரிக்க முடியும். ஆனால் மிக முக்கிய பிரிவுகள் இரண்டு காணப்படுகின்றன. அதில் ஒன்று அறிவு. மற்றது ஞானம். அறிவை நாம் தேடிப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஞானம் என்பது எமக்கு இயல்பாகவே கிடைப்பது. 

எனவே நாம் எப்போதும் அறிவத் தேடுபவர்களாக இருக்க வேண்டும். குர்ஆனில் ஒரு வசனம் உண்டு மிகவும் பலவீனமான வீடு சிலந்தி கட்டும் வீடு என்று. ஆனால் உலகிலுள்ள மூலப் பொருற்களில் மிகவும் பலமானது சிலந்தி நூலாகும். அதே நேரம் அடுத்த குர்ஆன் வசனமோ அறிவுள்ளோக்கு இதில் படிப்பிணை உண்டு என்றும் கூறுகிறது.

துப்பாக்கி துளைக்கா ஆடைகள் சிலந்தி இழையினாலே செய்யப் படுகிறது. ஆனால் அந்த இழையால் உருவாக்கப் பட்ட சிலந்தி வலையே சிறிய ஒரு அசைவாலும் இலேசான உடைந்து விடக் கூடியது. நாம் சரியான முறையில் நல்லடியார்களுக்கு தலைமை தாங்கும் மனிதர்களாக எமது குழந்தைகளை
வளர்க்கா விட்டால் அக்குடும்பமும் சிலந்தி வலைபோல்தான் இருக்கும் எவ்வளவு உறுதியாகக் கட்டப்பட்டாலும் அது பலவீனமான வீடாகவே இருக்கும். 

அதே நேரம் பெண் சிலந்தியை தேடி வெளியே இருந்து ஆண் சிலந்தி வரும். அப்போது கலவியில் ஈடுபட்டு பின்னர் உடனடியாக பெண் சிலந்தி ஆண் சிலந்தியைக் கொலை செய்து விடும். குறிப்பிட்ட கால அடைவின் பின் பெண் சிலந்தி நூற்றுக் கணக்கான குட்டிகளை ஈனும். உடனே அவை தாய் சிலந்தியை கொன்று குட்டிகள் உண்டு தீர்த்து விடும். நாம் சரியாக முத்தகீன்களுக்கு (நல்லடியார்களுக்கு) தலைமை தாங்கும்  பிள்ளைகளை உருவாக்காவிட்டால் சிலந்திக் கூட்டில் இடம் பெற்ற அதே மோதல்கள் எம்மிலும் ஏற்படலாம். ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கலாம். அதேபோல் சிலந்தி வலையானது பெண் சிலந்தி கட்டுவதாகும். அதில் குடித்தனம் நடத்தப்போய் ஏற்பட்ட விளைவு போல் சீதனம் வாங்கி பெண் வீட்டில் குடியிருக்கும் அண்களுக்கும் அதே நிலை ஏற்பட இடமுண்டு. இது போன்ற பல விடயங்களைத்தான் குர்ஆன் சிந்திப்போருக்கு படிப்பிணை உண்டு எனக் கூறியுள்ளது என்றார்.
Disqus Comments