Friday, May 13, 2016

15% வட்வரியும் அதன் சமூகத்தாக்கமும் மக்களை கொள்ளையடிக்கு அரசாங்கமும்.....

(Abdul Raheem Mohamed Inas)
சம்பவம் – 1
அண்மையில் நான் ஜனாஸா வீடொன்றுக்கு சென்றேன்.மரணமடைந்தவர் கடுமையான உழைப்பாளி. வெயிலில் கடுமையாக உழைத்ததால் தலையின் நரம்பில் பிரச்சினை ஏற்பட்டு ஆரோக்கியமாக இருந்த குறித்த நபர் மரணமடைந்திருந்தார். நான் ஜனாஸா வீட்டுக்கு சென்றிருந்தேன் ஜனாஸா வீட்டில் இருக்கவில்லை குறிப்பிட்ட சகோதரரின் வீட்டில் ஜனாஸாவை வைக்க இடம் இல்லாதாதால் உறவினர் ஒருவரின் வீட்டிலேயே ஜனாஸாவை வைத்திருந்தனர். மரணமடைந்த நபரின் வீட்டில் 7 பேர் வசிப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் அந்த வீடோ குருவிக் கூட்டை விட அளவில் சிரியது. இது இவரின் நிலைமை மட்டுமல்ல நாட்டில் 50 வீதத்துக்கும் அதிகமானோரின் நிலை இது தான்.

சம்பவம் – 2
அண்மையில் இலங்கை தேசிய நாளேடுகளில் வெளிவந்த விடயம் சம்பத் என்ற நபர் கொழும்பில் 1 லட்சத்துக்கு வீடு வாங்கி தருவதாக கூறி போலி அரச ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்த விடயம். குறித்த நபரிடம் சுமார் 80க்கு மேற்பட்டோர் பணம் கொடுத்து ஏமாந்து போயிருந்தனர். இவரால் ஏமாற்றப்ட்டோர் பொலிஸில் சென்று முறையிட பொலிஸார் சம்பத்தை கைது செய்து சில நாட்களில் பிணையில் வெளியே செல்ல அனுமதித்தனர். வழக்கு தொடர்ந்து செல்கிறது எப்போது வழக்கு முடிவடையும் பாதிக்கபட்டோருக்கும் பணம் எப்போது கிடைக்கும் என்பது கேள்விக்குறி. சம்பத்துக்கு 1 லட்சம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களில் பலர் கொழும்பில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள். மிகவும் சாதாரண வசதி கொண்டவர்கள் இவர்கள் தமது தங்கநகைகள் வீட்டுப் பொருட்கள் கடன்பட்டுத்தான் இந்த 1 லட்சத்தை சம்பத்துக்கு கொடுத்துள்ளனர். சம்பத் மீண்டும் தனது ஏமாற்று தொழிலை தொடாங்கியுள்ளதாக கேள்வி. இவனால் மீண்டும் பாதிக்கப்படப் போவது சாதாரண வசதி கொண்டு சொந்த வீடு கூட இல்லாத கடன் சுமையில் வாழ்க்கையை ஓட்டிச் செல்பவர்கள் தான்.
சம்பவம் – 3
இன்று பொதுவாக எல்லா வீடுகளிலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே காணப்படுகின்றனர். அப்படி இருவரும் உழைக்காமல் வாழ்க்கை செலவை சமாளிப்பது என்பது கடினம். இவர்கள் பெரும்பாலும் கடையுணவையே நம்பி இருக்கின்றனர். வீட்டில் சமைக்க இவர்களுக்கு பெரும்பாலும் நேரம் இருக்காது. இப்படியான நிலையிலேயே சாப்பாட்டுப் பொதி, பனிஸ், பாண், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அதிகரிப்பால் இப்படியானவர்களின் வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதனை நினைத்தும் பார்க்க முடியாது. சமகாலத்தில் பெரும்பாலானவர்கள் இந்த வாழ்வமைப்புக்கே பழகிப் போனவர்கள். என்பது அனைவரும் அறிந்ததே. இப்படியான அதிகரிப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பாரியது. அதனை ஒரு ஆய்வின் மூலம் யாராவது அறிய முற்பட்டால் அதன் பயங்கரத்தை கண்டு அதிர்ந்து போவார்கள். நான் மேலே குறிப்பிட்டிருப்பது சமூகத்தில் நிலவும் சில மாதிரிகள் மாத்திரமே. இதனை விட மிகக் கஷ்டமான வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களே இலங்கை சமூகத்தில் அதிகம் அதிகம் காணப்படுகின்றனர்.

இப்படியான நிலையிலேயே JVP தலைவர் அநுரகுமார திஸாநாயகவின் வட்வரி தொடர்பான ஊடக சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அவ்வூடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டதாவது.

இந்த அரசின் பொருளாதார கொள்கைகள் இந்த நாட்டுக்கோ இந்த நாட்டு மக்களுக்கோ எந்த நலவையும் கொண்டு வரப்போவதில்லை என்பதனை நாம் தற்சமயம் தெளிவாக உணர்ந்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாம் உறுதியாக கூறினோம் “இந்த அரசுக்கு எந்த வகையிலும் நமக்கு நற்சான்றிதழ் தர முடியாது என்று. இறுதியாக நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாம் தெளிவாக கூறினோம்
இந்த அரசின் பொருளாதாரக் கொள்கையில்லாமல் வேறொரு சிறந்த பொருளாதார கொள்கை இந்த நாட்டுக்கு அவசியமென்று”
இவ்வரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. இக்காலப் பகுதியில் மக்கள் தெளிவாக உணர்ந்துகொண்டிருக்கின்றனர்
இந்த அரசால் மக்களின் வாழ்க்கை தரத்தை ஒரு சாணாவது முன்னுக்கு கொண்டு செல்ல முடியாது என்று.

இலங்கையில் அண்மைகாலத்தில் ரூபாவின் பெறுமதி பாரியளவு வீழ்ச்சியடைந்திருப்பது இவ்வரசின் காலப்பகுதியில் தான்.

அதாவது ஒரு டாலருக்கு ஒவ்வொருவரும் 147 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கிறது.

ரூபாவின் விலை வீழ்ச்சியடைந்தள்ளதால் நாம் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு பொருட்களின் விலையும் 15 – 20 வீதம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்ல பாரிய கடன் சுமையிலும் நாடு சிக்கி தவிக்கிறது. இந்த அத்தனை சுமைகளையும் மக்களின் மீது சுமத்துவதே இந்த அரசின் பொருளாதார கொள்கையாக மாறியிருக்கிறது.
 
இதனுடன்தனுடன் மட்டும் இந்த கூட்டு அரசு நின்றுவிடவில்லை.
அரசு  மே மாதம் 2 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட வட் வரியை பொருட்கள் சேவைகள் மீது அமுல்படுத்த துவங்கியுள்ளது. பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் ஒன்று அப்படியே இருக்கும் நிலையில் வட் வரி அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் எந்த வித கலந்தாலோசனையோ, அனுமதியோ இன்றி விசேட உரை ஒன்றின் மூலம் அத்தியாவாசிய மற்றும் பொருட்களுக்கு வட் வரி உட்பட சில வரிகளை அமுலுக்கு கொண்டு வந்தார் பிரதமர். இதன் மூலம் இதுவரை காலமும் வட் வரி சுமத்தப்படாத பல புதிய பொருட்கள் சேவைகளுக்கும் வட் வரி அமுல்படுத்தப்பட்டது.
இதனால் மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் சேவைகளுக்கு மேலதிகமாக 15 வீதம் வட் வரி மக்கள் செலுத்த வேண்டியுள்ளது.
பேக்கரி பொருட்களின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கப் போவதாக பேக்கரி சங்கம் அறிவித்துள்ளது. தனது சாப்பாட்டு பொதிகளின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்க வேண்டியிருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த மாதம் உங்களுக்கு நீர் கட்டணம் கிடைக்கும் போது அதிலும் 15 வீதம் வட் வரி சேர்க்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களுக்கு வட்வரி சேர்க்கப்படவில்லை என கூறி அரசு மக்களை ஏமாற்றுகிறது. தண்ணீர் அத்தியாவசிய பொருளில்லையா? அத்தியாவசிய பொருட்களுக்கு வட் வரி இல்லையென்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் மீதும் அரசு வட் வரி விதித்துள்ளது. தண்ணீர், பனிஸ், மருத்துவ பொருட்கள் அனைத்திலும் இது அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நீங்கள் உங்கள் மொபைல் போனுக்கு 100 ரூபா ரீலோட் செய்தால் உங்களால் 50 ரூபாவுக்குத் தான் பேச முடியும். இவை அத்தியாவசிய பொருட்களல்ல என அரசு சொல்கிறது. அரசு இப்படி  பொதுமக்கள் மீது பாரிய வரிச்சுமையயை சுமத்திவிட்டு.
இந்த கூட்டு அரசு பிரதமர் காரியாலத்திற்கு 5943 லட்சம் ஒதுக்கியிருக்கிறது. பாதுகாப்பு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக. மக்கள் மீது பாரிய வரிச்சுமைய சுமத்திவிட்டு பிரதமர் பாதுகாப்பு வாகனத்துக்காக 5943 லட்சத்தை தனக்கு ஒதுக்கிக்கொண்டுள்ளார். எமக்கு தற்சமயம் கிடைத்திருக்கும் தகவலின்படி 2 வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காகவே இந்த பாரிய தொகை பணம் ஒதுக்கப்படுகிறது.
2 வாகனங்கள் வாங்க சுமார் 6000 லட்சம் அதாவது ஒரு வாகனத்துக்கு 3000 லட்சம். இவர்கள் வாங்கப் போவது ஹெலிகொப்டரா என்று தெரியவில்லை. அமைச்சர் ஹரீன் பிரநாந்து தனது உத்தியோகபூர்வ இல்லத்தை புணர்நிர்மானம் செய்துகொள்ள 42 லட்சம் ஒதுக்கியுள்ளார்.
தபால் மற்றும் தபால் சேவை முஸ்லிம் சமய விவகார அமைச்சு அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை புணர்நிர்மாணம்செய்ய 8,850,000 ஒதுக்கியுள்ளார்.

சாதாரண கிராமப்புறத்து ஒருவர் வீடு ஒன்று கட்ட வங்கியில் சாதாரணமாக 3 லட்சம் தான் கடன் கொடுப்பார்கள். ஆனால் அமைச்சரின் வீட்டை புணர்நிர்மாணம் செய்ய 88 லட்சம் ஒதுக்கியுள்ளார். 

அமைச்சர் கபீர் ஹாசிம் தனது காரியாலயத்தின் சுற்றுச் சூழலை ஒழுங்குபடுத்திக் கொள்ள 600 லட்சம் ஒதுக்கியுள்ளார். முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் கட்டிடத்தின் செலவுகளுக்காக 1160 லட்சம் ஒதுக்கியுள்ளார்கள். மக்களின் நரம்பை வெட்டி அவர்களின் இரத்தத்தை எடுத்து அமைச்சர்ககளின் வயிற்றை போசிப்பதே இந்த அரசின் வரிக்கொள்கை.
ஆழமாக அவதானித்தால் அநுகுமார தெரிவித்துள்ள கருத்துக்களுக்கும் நாம் மேலே குறிப்பிட்ட சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இன்று மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொருளாதார சுமையால் நாட்டின் ஒவ்வொரு சாதாரண குடிமகனும் தனது இயலுமையை மீறி உழைக்கின்றனர்.
இதனால் அவன் பல்வேறு மனஉலைச்சல்களுக்கும் நோய்களுக்கும் உட்படுகின்றான்.
நோய்க்கு மருத்துவம் செய்ய அரச வைத்தியசாலைக்கு சென்றால் அங்கும் போதியளவு மருந்து இல்லை பல மருந்துகளை நாமே வெளி இடங்களில் கொள்வனவு செய்து கொள்ள வேண்டிய நிலை.
இலவச மருத்துவ சேவை என்று பெயர் மட்டும் தான். நாடளாவியரீதியில் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு.
தனியார் வைத்தியசாலைக்கு சென்றால் ஒரு சாதாரண இன்ஜெக்கசனுக்கு கூட வட் வரி அறவிடுகிறார்கள். நாட்டு மக்கள் இப்படி அதளபாதாளத்தில் வீழ்ந்து மடிந்து கொண்டிருக்கும் போது இப்படியான விடயங்களுக்கு அரசு பணம் ஒதுக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அரசு பொதுமக்களை மனிதனாக கூட மதிக்கவில்லை என்றே எண்ண வேண்டியுள்ளது.
வரி வருமானம் இல்லாமல் அரசு ஒன்று நாட்டை நடாத்தி செல்வது இயலாத காரியம் என்பது உண்மையான விடயம் என்ற போதும். அரசியல்வாதிகள் தமக்கு மட்டும் பலகோடி பெறுமதியான இலவச வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை பெற்று, தமது உத்தியோகபூர்வ இல்லங்களை சொகுசு மாளிகைகளாக மாற்ற பல கோடிகளை ஒதுக்கி சொகுசு வாழ்க்கை வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில் அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு  “நாடு கடன் சுமையில் இருக்கிறது பொதுமக்களே நீங்கள் பட்டிகளை இறுக கட்டிக்கொள்ளுங்கள்”  என்று நாட்டு மக்களுக்கு சொல்வது மக்களை மடையர்களாக்கும் செயலே.

13 May 2016 இல் இக்கட்டுரை விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியது
Disqus Comments