Friday, December 9, 2016

ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதது ஏன்? அப்போலோவின் விளக்கம் இது தான்!!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காப்பாற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது ஏன் என்பது குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி காய்ச்சல் மற்றம் நீர்ச்சத்து குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பலமுனை சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மெதுவாக அவர் குணமடைந்து, வாய் மூலம் உணவு சாப்பிடும் அளவுக்கு முன்னேறினார். அதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து முக்கிய கண்காணிப்பு மையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர் என அப்போலோ கூறியுள்ளது.
நிபுணர்கள் இருக்கும்போதே, டிசம்பர் 4-ஆம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு மீண்டும் உயிர்ப்பிப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சர்வதேச அளவில் அளிக்கப்படும் நவீன `எக்மோ' எனப்படும் அதி உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதாவது, நுரையீரல் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாதபோது, அந்தக் கருவியின் உதவியால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் உள்ளே அனுப்பப்படும். ஆனால், அவையங்களை முழுமையாக செயல்பட வைக்க நிபுணர்கள் தீவிர முயற்சி செய்த போதிலும், ஜெயலலிதாவின் உடல்நிலை அதை ஏற்கும் அளவுக்கு இல்லாத சூழ்நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் காலமாகிவிட்டார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதல்வரைக் காப்பாற்ற அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் முயற்சி செய்த போதிலும் அது முடியாமல் போனது என அப்போலோ வருத்தம் தெரிவித்துள்ளது.
முதல்வரின் மறைவுக்கு பொதுமக்களுடன் இணைந்து தாங்களும் இரங்கல் தெரிவிப்பதாக அப்போலோ மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Disqus Comments