Wednesday, December 7, 2016

குவைத்தில் அரபியால் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண் வைத்தியாசலையில்!!!


குவைத் நாட்டுக்கு பணிப் பெண்ணாக சென்று மாடியில் இருந்து விழுந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கையர் ஒருவரை, நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். 

குவைத் நாட்டுக்கான தூதுவராலயத்தின் தலையீட்டில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

2014ம் ஆண்டு குவைத்துக்கு சென்ற கொகுன்நெவ - ரனோராவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம், தான் பணிபுரிந்த வீட்டின் மாடியில் இருந்து விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனினும், அந்த வீட்டின் உரிமையாளரால் தான் மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 

இந்தநிலையில், குவைத் தூதுவராலயம் இது குறித்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இதுஇவ்வாறு இருக்க பாதிக்கப்பட்ட பெண்ணை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரினர். 

இதற்கமைய இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக, அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். 
Disqus Comments