Wednesday, December 7, 2016

கிணறு வெட்ட பூதம் வெளியானது போன்றதுதான் கருணாவின் கைதும், விடுதலையும்.

யாரும் எதிர்பாராமல் கடந்த 29.11.2016 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அவர்கள் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்படுவார் என்ற அரசியல் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பினையும் மீறி இன்று விடுதலை செய்யப்பட்டார். இவர் கைதுசெய்யப்பட்டதில் புதைந்துகிடந்த சில அரசியல் காரணத்தினை எதிர்வுகூறி கட்டுரை ஒன்றினை விபரமாக எழுதி இருந்தேன்.

கருணா அம்மான் அவர்கள் சிறையில் இருந்துகொண்டு தான் முக்கிய ரகசியங்களை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். கருணாவின் இந்த அறிக்கையினால் சில ஆட்சியாளர்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உற்பட இராணுவ அதிகாரிகள் கூட அதிர்ச்சியடைந்து விட்டார்கள். அத்துடன் இவரது கைதை இந்தியா, நோர்வே போன்ற நாடுகள்கூட விரும்பவில்லை.

2௦௦2 ஆம் ஆண்டு நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் விடுதலை புலிகளுடன் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் சமாதான ஒப்பந்தமொன்றினை செய்துகொண்டு தமிழர்களுக்கான தீர்வினை வழங்கும்பொருட்டு, புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துகிறோம் என்ற போர்வையில், புலிகளை அழிப்பதற்கான நடவடிக்கையினை மட்டுமே மேற்கொண்டிருந்தார்.

இதற்காக ரணிலின் வலைக்குள் அகப்பட்டவர்தான் அன்றைய புலிகளின் கிழக்கு தளபதி கருணா அம்மான் ஆகும். இதற்காக நோர்வே அரசும், ரணிலும் ஆடிய நாடகங்களை கருணா மட்டுமே அறிந்திருந்தார். அதில் நோர்வேயினால் வழங்கப்பட்ட பணம் சம்மந்தப்பட்ட விபரங்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

புலிகளை அழிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ரணில் விக்ரமசிங்க அவர்கள் தொடக்கிவைக்க, அதன் இறுதி வடிவம் அனைத்தினையும் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் முன்னெடுத்து, சமாதானத்துக்கான போர் என்ற போர்வையில் இடைவிடாத நீண்ட யுத்தம் ஒன்றினை புலிகள் மீது தொடுத்து புலிகள் இயக்கத்தினை அழித்தொழித்தார்.

முள்ளியவாய்க்களுடன் முடிவுற்ற புலிகளுக்கெதிரான யுத்தத்தில் கருணா அம்மானின் பங்களிப்பு பிரதானமானது. அதாவது யுத்தத்தின் கதாநாயகனே அவர்தான். அவரது வழிகாட்டலின் பேரிலேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் நாற்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை கொன்றுதான் யுத்தத்தினை வெற்றி கொள்ள வேண்டியிருந்தது.

இறுதியில் யுத்த குற்றம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முறைப்பாடும் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுப்பது பற்றி ஆராயப்பட்டுக்கொண்டு இருகின்றது. இந்த நிலைமையில் கருணா அம்மான் அவர்கள் வாய் திறந்தாள் அதன் விபரீதங்கள் என்ன என்பது பற்றி ஆட்சியாளர்கள் தொடக்கம் இராணுவத்தினர்கள் வரைக்கும் நன்கு அறிந்து வைத்துள்ளதுடன், யுத்த குற்ற விசாரணைக்கு அது வலுவான சாட்சியமாக மாறிவிடும்.

அதுமட்டுமல்லாது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவத்தினர்கள் தொடக்கம் பொதுமக்கள் வரைக்கும், மற்றும் யுத்தத்தில் பாவிக்கப்பட்ட தடை செய்யப்பட குண்டுகள், கனரக ஆயுதங்கள் போன்ற விடயங்களும், யுத்தத்தில் இந்தியாவின் வகிபாகம் என்ன என்ற விடயங்களும், சரணடைந்த புலிகளின் தலைவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், அவரது மனைவி போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்பன பற்றிய விபரங்களை நிரூபிக்கக்கூடிய அனைத்துக்கும் அங்கீகரிக்கப்பட்ட சாட்சியாக கருணா அம்மான் அவர்களின் வாக்குமூலம் அமைந்துவிடும் என்பதனால்தான் பதிநான்கு நாட்கள் பூர்த்தியாக முன்பே கருணா அம்மானை விடுதலை செய்துள்ளார்கள்.

இது கிணறு வெட்ட பூதம் வெளிக்கிளம்பியது போன்று அமைந்துள்ளது. சில காரணங்களுக்காக கருணா அம்மானை சிறையில் அடைக்கபோய், இறுதியில் அவரது சிறையடைப்பு அனைவரையும் சர்வதேசரீதியில் தலைகுணிய வைத்துவிடும் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனாலேயே கருணா அவர்களை அரசாங்கம் வலிந்து விடுதலை செய்துள்ளது.

அதுமட்டுமல்லாது கருணாவிடம் உள்ள இரகசியம் கருணாவுடனேயே அழிந்துபோகட்டும் என்ற ரீதியில் எதிர்காலங்களில் அவரது உயிருக்கு ஆபத்தும் காத்திருக்கின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Disqus Comments