ரூஸி சனூன் புத்தளம். மனைவியோடு முரண்பட்டுக்கொண்டு அதிசக்தி வாய்ந்த மின்மாற்றியின் மின் கம்பியில் கைகளை வைத்தவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் புத்தளம் நகரில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவமானது திங்கட்கிழமை (16) மாலை புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள இலவன்குளம், கரைத்தீவு பஸ் தரிப்பு நிலையத்தின் கைவிடப்பட்ட மின்சார சபை வளாக பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பஸ் வண்டிகளில் றபான் அடித்து யாசகம் கேட்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவரின் மரண விசாரணைகள் புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி டொக்டர் நந்தன விமலவீர மேற்கொண்டார்.
சிங்கள மதத்தை சேர்ந்த இவர் தமிழ் பெண் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். இதற்கு முன்பு இவர் பிரச்சினை ஒன்றின் போது கழுத்து வெட்டப்பட்டு காயத்துக்குள்ளாகிவர் என்பதும் மரண விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி டொக்டர் நந்தன விமலவீர தெரிவித்தார்.
சம்பவ தினம் தனது திருமண புகைப்படம் மற்றும் தான் பாடல் பாடி சம்பாதிக்கும் றபான் போன்றவற்றை குறித்த இடத்தில் அமையப்பெற்றுள்ள மின் மாற்றிக்கு கீழே வைத்துவிட்டு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ள கம்பத்தில் ஏறி 11 ஆயிரம் வோல்டேஜ் மின் வலு கொண்ட கம்பியில் கையை வைத்தன் காரணமாக தூக்கி வீசப்பட்டு இவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் மனைவி என கருதப்படும் பெண்மணி மரண விசாரணையின் போது காணப்படாததால் இது தொடர்பான விசாரைணகளை தொடருமாறு புத்தளம் பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி டொக்டர் நந்தன விமலவீர பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை குறித்த மின்மாற்றி அமைந்துள்ள பகுதி எவ்வித பாதுகாப்பும் அற்ற பிரதேசமாக இருப்பதால் இலங்கை மின்சார சபை இது விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
(நன்றி - புத்தளம் ஆன்லைன்)