கூரகல, ஜெய்லானி பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிவாசல் உடமைகளையும் பொருட்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்திக்கொள்ளுமாறும் தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து முஸ்லிம்கள் மத்தியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இப் பகுதியில் தொல்பொருள் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வெளியார் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் இப் பிரதேசத்திற்குள் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகளும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் அகற்றப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை நேற்று முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவொன்று மேற்கொண்டது. குழுவினர் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரியவை பத்தரமுல்லையிலுள்ள அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து நிலைமைகளை விளக்கினர்.
ஜெய்லானி பள்ளிவாசல் பலநூறு வருட வரலாற்றைக் கொண்டது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் புகழ் பெற்றது. இந்தப் பள்ளிவாசல் தொல்பொருள் அகழ்வினை காரணம் காட்டி பள்ளிவாசல் அகற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. பாதுகாப்பு செயலாளர் பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என ஏற்கனவே உறுதி வழங்கியிருக்கிறார் என தூதுக் குழுவினர் அமைச்சர் ஜகத் பாலசூரியவிடம் விளக்கினர்.
அமைச்சரைச் சந்தித்த தூதுக் குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் அஸாத்சாலி நஜீப் மௌலானா ஹில்மி அஹமட் ஜெய்லானி பள்ளிவாசல் தலைவி ரொசானா அபுசாலி ஆகியோர் அடங்கியிருந்தனர்.
ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக் ஷ சம்பந்தப்பட்டிருப்பதால் அவருடன் தொடர்பு கொண்டு சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார்.
பௌத்த மரபுரிமைகள் மாத்திரமல்ல நாட்டில் ஏனைய மத மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி தொல்பொருள் ஆய்வு மைய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதென தெரிவித்து அண்மையில் பள்ளிவாசல் உடமைகள் விடுதி பயணிகள் தங்கும் அறைகள் பள்ளிவாசல் இமாம் தங்கும் அறை கொடியேற்றக் கம்பங்கள் அப்பகுதியிலிருந்த வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் அகற்றப்பட்டு தொல்பொருள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அகழ்வு பணிகளை பாதுகாப்புச் செயலாளர் ஸ்தலத்துக்குச் சென்று பார்வையிட்டார். பள்ளிவாசலின் இருப்புக்கு உத்தரவாதமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று திங்கட்கிழமை மாலை வரை பள்ளிவாசல் நிர்வாகம் குறிப்பிட்ட உத்தரவுக்கமைய பள்ளிவாசல் உடமைகளை அவ்விடத்திலிருந்து வெளியேற்றிக் கொள்ளவில்லை.
பள்ளிவாசல் விவகாரத்தில் சுமுகமான தீர்வு கிட்டாது விடின் ஆர்ப்பார்ட்டமொன்றினை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகிறது.