Sunday, June 15, 2014

ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள் எரிப்பு; பள்ளிவாசல் மீதும் தாக்குதல்!

அளுத்கம மற்றும் தர்ஹா நகர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் பல பேரின வெறியர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு உள்ளிட்ட சில கடைகள் மீது தீ வைக்கப்பட்டள்ளதாகவும் மற்றும் சில கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அளுத்கம நகரில் இன்று மாலை பொதுபல சேனாவின் பொதுக் கூட்டமொன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தர்கா நகர் பிரதேசத்தினை நோக்கி பேரணி ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தியதுடன் பள்ளிவாசல் உட்பட முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகள் மீது கல்வீச்சு நடத்தியுள்ளனர்.

இதனால் அங்கு கைகலப்பு மற்றும் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு அனைவரையும் கலைத்ததுடன் அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களிலுள்ள சில முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தீ வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
Disqus Comments