Wednesday, February 25, 2015

தேசிய அரசாங்கத்தில் தமக்கு 50 அமைச்சுக்கள் வேண்டும் - ஸ்ரீ.ல.சு.கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாயின் அந்த அரசில் 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிளும், 25 பிரதி அமைச்சுப் பதவிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிரிபால சில்வாவிடம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்தில் புதிய அமைச்சரவை அமைச்சுக்கள் தெரிவின் போது முக்கிய அமைச்சுக்கள் சில ஸ்ரீ. ல. சு. கட்சிக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், அந்த அரசாங்கம் 2016ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும் எனவும் ஸ்ரீ.ல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். கடந்த அரசாங்கத்தில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு தேசிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படக் கூடாது எனவும் அவர்களது கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேண்டுகோள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிரிபால சில்வா இதுவரை எதுவித பதிலையும் தெரிவிக்கவில்லை எனவும், கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு சம்மதத்தை அவர் தெரிவிப்பார் என எதிர்பார்ப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேனை தேசிய அரசாங்க யோசனைக்கு மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய ஐக்கிய முன்னணி, மஹஜன எக்சத் பெரமுண, கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக முற்போக்கு முன்னணி போன்ற கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு பாராளுமன்றத்தை வரும் ஏப்பிரில் மாதத்தினுள் கலைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments