பந்து வீச தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் ஓப் ஸ்பின்னர் சயீட் அஜ்மல் தனது பந்துவீச்சுப் பணியை சரி செய்துகொண்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளதுடன் பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் சொஹாக் காஸிக்கும் தடைநீக்கியுள்ளது.
பாகிஸ்தானின் சயீட் அஜ்மல் மற்றும் பங்களாதேஷின் சோஹாக் காஸி ஆகியோர் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களது முழங்கை மடங்குவது ஐ.சி.சி. விதிமுறையின் படி 15 பாகைக்கும் குறைவாக இருந்தது. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதான தடை நீக்கப்பட்டது.
ஆனாலும், மீண்டும் அவர்கள் போட்டிகளில் பந்துவீசும் போது 15 பாகைக்கு மேல் முழங்கை மடங்குவதாக நடுவர்கள் உணர்ந்தால் உடனடியாக முறையிடலாம் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
சயீட் அஜ்மல் மற்றும் சோஹாக் காஸி ஆகியோர் மீது நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனைகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் நடுவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அவர்களிருவரினதும் புதிய பந்துவீச்சுப் பாணி இடம்பெற்றுள்ளது.
இருவரது பந்துவீச்சும் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் இறுதிச் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
முதலிர் சயீட் அஜ்மல் வீசிய அனைத்துப் பந்துகளும் வேறுபாடின்றி த்ரோ செய்வதாக ஐ.சி.சி. சோதனைகளில் தெரியவந்தது. 42 பாகை முழங்கையை மடக்கி அவர் அனைத்து பந்துகளையும் வீசினார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சயீட் அஜ்மல் உலகக் கிண்ண அணியின் தேர்வுகளிலிருந்து விலக்கப்பட்டார்.
இதேவேளை, அஜ்மலின் பந்துவீச்சுப் பாணியை சரி செய்ததில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக்கின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
