பொதுத் தேர்தல் பெரும்பாலும் ஜுன் மாதமளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியைத் தோற்கடித்து மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமைச்சரவையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. இதன் ஒரு கட்டமாக மைத்ரி – மஹிந்த – சந்திரிக்காவை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வரும் அதேவேளை இது தொடர்பாக கலந்துரையாடும் வகையில் அண்மையில் கம்பஹா மாவட்ட சு.க அமைப்பாளர் பீலிக்ஸ் பெரேரா தலைமையில் இராப்போசன விருந்தொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இதுவரை இடம்பெற்ற அனைத்து கலந்துரையாடல்களின் போதும் மஹிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து ஒரே தளத்தில் இயங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க மறுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவியேற்றதும் கையுமாக வாழ்த்துவதற்காக தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட தன்னோடு வெறும் 19 விநாடிகளே உரையாடிய மஹிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதோடு அதன் பின் தனது உரிமைகளையும் பறித்து, தன்னையும் தன் தாயையும் அவமானப்படுத்தியவர் என சந்திரிக்கா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
