-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா
இம்முறை உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தான் நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துறைமுக அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (13) வருகை தந்திருந்த அமைச்சிடம் உலகக்கிண்ண போட்டிகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கூறிய அவர், 'இலங்கை அணி ஒரு குழுவாக இல்லாமல் குடும்பமாக இணைந்து செயற்பட்டால் உலகக்கிண்ணத்தை வெல்ல முடியும். இதுவரை காலமும் இலங்கை அணி ஒரு குடும்பம் போலவே செயற்பட்டு வந்தது' என்றார். 'அணிக்கு நல்ல அணித்தலைவராக அஞ்சலே மத்தியூஸ் இருக்கின்றார். பல உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற மூத்த வீரர்களான மஹேல, சங்கக்கார,
டில்சான் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆசிய மைதானங்களை விட அவுஸ்திரேலிய, நியுஸிலாந்து மைதானங்கள் கடும் சவாலான மைதானமாக இலங்கை அணி வீரர்களுக்கு இருக்கும். அந்த சவால்களை எதிர்கொண்டு இலங்கை அணியினர் கிண்ணத்தை வெல்வார்கள்' என்றார். -