உலக கோப்பை போட்டித்தொடரின் முதல் போட்டி இன்று இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையே கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்து உள்ளது. இதன் படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அபாயகரமான டேவிட் வார்னரும் ஆரோன் பிஞ்சும் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களை சேர்த்து இருந்த போது பிரிந்தது. வார்னர் 22 ரன்களில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வாட்சன் ரன் எதுவும் இன்றியும் ஸ்மித் 5 ரன்க்ளிலும் வெளியேறினர்.
பின்னர் தொடக்க வீரர் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்த பெய்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக ஆடிய பிஞ்ச் 135 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பிஞ்ச் பெற்றுள்ளார். தொடர்ந்து பெய்லி 55 ரன்களிலும் மேக்ஸ்வெல் 66 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்துள்ளது.
கடைசி ஓவரை வீச வந்த ஸ்டீவன் பின் முதல் மூன்று பந்துகளும் ரன் எடுக்கப்பட்ட நிலையில், 4-வது பந்தில் பிராடிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஹாடினும், 5வது பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து 66 ரன்களில் மேக்ஸ்வெலும், கடைசி பந்தில் ஜேம்ஸ் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல், ஜான்சனும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். எனவே ஆட்டத்தின் கடைசி மூன்று பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் ஸ்டீவன் . நடப்பு உலக கோப்பையின் முதல் ஹாட்ரிக் சாதனை, முதல் நாளிலேயே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து பவுலர் எடுத்த முதல் ஹாட்ரிக் இதுவாகும். உலக கோப்பை போட்டியில் இது 7வது ஹாட்ரிக் சாதனை ஆகும்
சேத்தன் சர்மா முன்னதாக 1987ம் ஆண்டு உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக நாக்பூரில் நடந்த போட்டியில், இந்தியாவின் சேத்தன் சர்மா ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
சக்லைன் முஷ்தாக் 1999 உலக கோப்பையின்போது ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் ஸ்பின்னர் சக்லைன் முஷ்தாக் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சமிந்தா வாஸ் 2003 உலக கோப்பையின்போது வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
பிரெட் லீ 2003 உலக கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ கென்யாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
2007 உலக கோப்பையின்போது, இலங்கையின் மலிங்கா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பொல்லாக், ஆன்ட்ரியூ ஹால், ஜேக் கல்லீஸ் ஆகியோர் இவரது பந்தில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். கடந்த உலக கோப்பையின்போது ஹாட்ரிக் சாதனை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
