எதிஹாட் எயார்வேய்ஸ் (ETHIHAD AIRWAYS ) நிறுவனத்தினரால்
கல்பிட்டி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆலங்குடா முஸ்லிம் மாகா
வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு உட்பட
அந்நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டினால் புனரமைப்புச் செய்யப்பட்ட
வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயம் மற்றும் ஏனைய வகுப்பறைக்கட்டடங்களின்
திறந்து வைக்கும் நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் எச். எம். றசீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பதாஹ் அல் முல்லாத்தும் இலங்கை வந்த எதிஹாட் விமான சேவை நிறுவனத்தின் காலித் அல் மெஹைர்பி தலைமையிலான தூதுக்குழுவினருடன் இணைந்து இந்த அன்பளிப்புக்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அரச மற்றும், விமான அரசியல் விவகாரத்திற்கான சிரேஷ்ட உப தலைவர் காலிட் அல் மெஹைர்பி,
அபுதாபி விமான நிலைய செயற்பாட்டு மையத்தின் உப தலைவர் அலி அல் ஷம்ஸ்,
சுகாதார சேவைகள் உப தலைவர் டாக்டர் நதிஆ காசிம் மொஹமட் யூசுப் பஸ்டாகி
உட்பட நிறுவனத்தின் இலங்கை அலுவலக அதிகாரிகள் பலர் அதிதிகளாகக் கலந்து
கொண்டதோடு சிறப்பதிதிகளாக புத்தளம் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்
என். எம். எம். நஸ்மி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என். டி. எம். தாஹிர்
ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் எதிஹாட் ஏர்வேஸ் விமானப்
பணிப்பெண்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்
போது இவ்வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், ஆடைகள்,
சேர்ட்டுக்கள் மற்றும் பேரீத்தம் பழங்கள் அடங்கிய பொதிகள் வழங்கி
வைக்கப்பட்டது.

