Tuesday, March 31, 2015

பரீட்சைப் பெறுபேறு எதிர்பார்த்தபடி இல்லை! மாணவி தற்கொலை


(அததெரன தமிழ்) புஸ்ஸல்லாவ - பிளக்போரஸ்ட் கிராமத்தை வசிபிடமாகக் கொண்ட 17 வயதுடைய செல்வி லிதுர்ஸ்சனா மகேஸ்வரன் என்ற மாணவி பரீட்சை பெறுபேறு எதிர்பார்த்தபடி அமையாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

குறித்த மாணவி புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் தரம் 12 இல் கலைப்பிரிவில் கல்வி பயின்று வருகின்றார். 2013ம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய இவர், கணித பாடத்தில் சித்தியடையவில்லை. 

தொடர்ந்து 2014ம் ஆண்டு கணிதப் பாடத்தை இரண்டாம் தடவை எடுத்து தருவதாக கூறி கல்வி பொதுத் தராதர உயர்தரத்தில் பயின்று வந்துள்ளார். 

இதன்படி 2014ம் ஆண்டு கணித பாடத்தை மீண்டும் எழுதிய இவர், தற்போது வந்துள்ள பெறுபேற்றினை கையடக்க தொலைபேசியில் பார்த்து விரக்தி அடைந்த நிலையிலேயே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

இதேவேளை பெறுபேறு வந்தபொழுது பெற்றோர் உட்பட உறவினர்கள், சில ஆசிரியர்கள் அவரை கண்டித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. 

இது தொடர்பாக பாடசாலையின் அதிபர் ரவிசந்திரிக்காவைத் தொடர்பு கொண்ட போது, புதிய சுற்றறிக்கையின் படி கணித பாடம் இல்லாமல் உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும் அதனை நாங்கள் மாணவர்களுக்கு அறிவித்தும் உள்ளோம். 

மாணவியை பொருத்த வரையில் நல்ல பழக்கவழக்கம் உள்ள நன்கு கல்வி கற்க கூடியவர். நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலாம் தவணை பரீட்சைக்கு வெள்ளிக்கிழமை (27) வரை சமூகம் தந்துள்ளார். இருந்தும் இந்த துரதிஷ்ட்டமான நிகழ்வு குறித்த தனது பாடசாலை கவலையடைவதாகவும் தெரிவித்தார். 

மேலும் மாணவி சம்பவ தினத்தன்று வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்பா பாடசாலையின் அதிபர், அம்மா ஆசிரியர் இவர்கள் இருவரும் பாடசாலை சென்று விட்டனர். 

இரு சகோதரிகள் ஒரு சகோதரன் இவர்களும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் வீட்டு மின் விசிரியைப் பயன்படுத்தி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

எப்போதும் தனிமையை விரும்பும் இவர் தற்கொலைக்கு முன் தன்னுடைய கடந்தகால புகைப்படங்களை பார்த்துள்ளார். கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார். தனக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்று எமுதியுள்ளதாக தெரியவருகின்றது. 

விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை (01) இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இது குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்ட போது, புஸ்ஸல்லாவ பிரதேசத்தை பொருத்தவரையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை முயற்சி அதிகரித்து வருகின்றது, இதனை தடை செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் பாடசாலைகள்தோரும் கூட்டங்களும் நடாத்தப்பட்டும் வருகின்றது. 

மாணவர்களுக்கு பாடங்களை தவிர விளையாட்டு, கலை, கலாச்சார விடயங்களில் ஈடுபட வாய்ப்பளிக்க வேண்டும். அத்துடன் மாணவர்களின் தன் நம்பிக்கையை வளர்க்க வேலைத்திட்டங்களை பாடசாலைகள் தோறும் அதிபர்கள் நடவடிக்கை எடுத்து ஆசிரியர்கள் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

அவ்வாறான நிலையிலேயே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம், என்று கூறினார். 
Disqus Comments