(Tamil Mirror) -எம்.யூ.எம்.சனூன் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்து, அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதற்கு முன்வர வேண்டும் என்று புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். ஆர். எம். முஹ்ஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தளம் மக்கள் சார்பில் இந்த வேண்டுகோளை விடுப்பதாக தெரிவித்துள்ள அவர், இவ் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வரவும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். புத்தளம் ஆதார வைத்தியசாலை வட மேல் மாகாண சபைக்குக் கீழ் உள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புத்தளம் நகரில் அமைந்துள்ள இவ்வைத்தியசாலையை நம்பி சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். மேலும் இங்கிருந்து சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்ள புத்தளம் பிரதேசத்தில் நீண்ட காலமாக வாழும் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் உள்ளனர். இவ்வளவு பெரு எண்ணிக்கையான மக்களுக்காக இவ்வைத்தியசாலை பல மடங்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
பௌதிக வளம், மனித வளம் மற்றும் சேவைகளின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு இவ்வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து, புத்தளம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கௌரவ அமைச்சர் ஹசன் அலி பூர்த்தி செய்து வைக்க வேண்டும் என்று நாம் தயவாய் வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.