(-எம்.எஸ்.முஸப்பிர்) மழை நீர் நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்து 3 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி உமாராபாத் மீள்குடியேற்றக் கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
முஹம்மது அசீம் அப்துர் ரஸ்ஸாக் (வயது 3) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்தச் சிறுவனின் வீட்டிலுள்ள பழைய கிணறு மழை நீரினால் நிரம்பியிருந்தது. இந்தச் சிறுவன் அருகு வீட்டில் விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற சற்று நேரத்தில் கிணற்றிலிருந்து சத்தம் வந்துள்ளது. உடனடியாக வீட்டிலுள்ளவர்கள் சிறுவனை தேடினர்.
இருப்பினும் அருகு வீட்டில் சிறுவன் இல்லாததை அடுத்து, கிணற்றில் ஒருவரை இறக்கிப் பார்த்தபோது சிறுவன் கிணற்றில் விழுந்த நிலையில் காணப்பட்டான். உடனடியாக இவனை மீட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்;. எனினும் சிறுவன் உயிரிழந்திருந்தான்.
மரண விசாரணையின்போது, சிறுவன் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மரணம் சம்பவித்ததாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம் தெரிவித்தார்.