(Dailythanthi) பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை, தலையை துண்டித்து கொலை செய்த கணவர், அந்த தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
கூலித்தொழிலாளி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நாராயண செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (வயது 49), கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு ரமேஷ் (26) என்ற மகனும், ஜோதி (20), சித்ரா (18) ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன.
செல்வியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சில ஆண்களுடன் கள்ள தொடர்பு வைத்து இருப்பதாக கூறி சின்னப்பராஜ், மனைவியை கண்டித்தார். நேற்று காலை சின்னப்பராஜும், செல்வியும் வடக்கிபாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்துக்கு தேங்காய் பறிக்கும் வேலைக்கு சென்றனர். அங்கும் இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தலையை துண்டித்து கொலை
தகராறு முற்றவே சின்னப்பராஜ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வியின் வயிற்றில் வெட்டினார். தடுக்க முயன்ற செல்வியின் இடதுகையில் இருந்த 3 விரல்கள் துண்டானது. இதில் ரத்த வெள்ளத்தில் செல்வி மயங்கி விழுந்தார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத சின்னப்பராஜ், செல்வியின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்தார்.
பின்னர் ஒரு சாக்குப்பையில் தலை மற்றும் அரிவாளை சுருட்டி, எடுத்துக்கொண்டு 1லு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தலையுடன் சின்னப்பராஜ் வருவதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சின்னப்பராஜ் தலையுடன் போலீசில் சரண் அடைந்தார். தலையுடன் ஒருவர் வந்ததை கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்காதல்
சின்னப்பராஜ் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது சொந்த ஊர் நெகமம் அருகே உள்ள கள்ளிப்பட்டி. கள்ளிப்பட்டியில் வசித்தபோதே செல்விக்கு சிலருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டித்தும் கேட்கவில்லை. இதையடுத்து செல்வியின் சொந்த ஊருக்கு அருகில் சென்றால், திருந்திவிடுவார் என்று நினைத்து நாராயண செட்டிபாளையத்திற்கு 6 மாதத்திற்கு முன் வந்தோம். அங்கும் வடக்கிபாளையம் தெற்கு வீதியை சேர்ந்த ஒருவருடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் தனிமையில் இருப்பதை நான் நேரில் பார்த்துவிட்டேன். இதன் பின்னரும் செல்வியை உயிரோடு விடக்கூடாது என்று முடிவு செய்தேன். நேற்று முன்தினம் இரவு செல்வி வீட்டிற்கு வராததால் எனக்கு கோபம் அதிகமானது. நேற்று காலை 2 பேரும் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றபோது கள்ளத்தொடர்பை விட்டுவிடு என்றேன். அதற்கு செல்வி, நான் அப்படி தான் இருப்பேன் என்றாள். ஆத்திரம் அடைந்த நான் தேங்காய் உரிக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி, அவள் தலையை துண்டித்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
சிறையில் அடைப்பு
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, செல்வியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சின்னப்பராஜை கைது செய்தனர். பின்னர் அவர் பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.