Monday, April 6, 2015

BBSஆல் முஸ்லிம்களின் வாக்குகளை இழந்தமைக்காக கவலைப் படுகிறேன்

தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தான் முன்னரே உணர்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 30 வருடங்களாக தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள் நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

தங்களுக்கு விடுதலையை வழங்கும் என அவர்கள் எதிர்பார்த்த அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா? என்றும் கேள்விஎழுப்பியுள்ளார்.

சிலோன் ருடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மக்கள் உங்களை பெருளவில் சந்திக்கவரும் போது என்னகருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு நான் தோற்கடிக்கப்பட்டதாக கருதவில்லை, மக்கள் என்னை இன்னமும் நேசிக்கின்றனர், குறிப்பாக சாதாரணமக்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் பதவிவிலகி மூன்று மாதங்களாகின்றன ஆனால் இன்னமும் தினமும் அவர்கள் பேருந்துகளில் வந்து என்னை பார்த்துச்செல்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி 8 ம் திகதிக்கு பின்னர் அவரது வாழ்க்கை எப்படியுள்ளது என்ற கேள்விக்கு நான் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை, ஏனென்றால் மக்கள் இன்னமும் தங்கள் பிரச்சினைகளுடன் என்னை நாடி வருகின்றனர்,  நான் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது, அனேகமானவை மத நிகழ்வுகள், ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் இல்லை என்பதை தவிர நான் வேறு வித்தியாசம் எதனையும் உணரவில்லை.

பொதுமக்களின் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு மதகுருமாரும், பொதுமக்களும் என்னை அழைப்பது எனது தவறா? ஊடகவியலாளர்கள் என்னை தேடி வருவது எனது தவறா? சிலர் விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக என்மீது உண்மையான அக்கறையுள்ளவர்களை நான் ஏன் காயப்படுத்தவேண்டும்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான விமர்சனங்கள் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டன, 2005 தேர்தலில் போட்டியிட்ட வேளை ஆலயங்களுக்கு சென்று மலர்களை வழங்குவதால் மாத்திரம் வெற்றிபெற முடியாது என குறிப்பிட்டனர். அவர்களது விமர்சனத்தையும் மீறி நான் வெற்றிபெறவில்லையா?இவர்கள் என்மீதான அச்சத்தால் என்மீது சேற்றை வாரியிறைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

10 வருடத்திற்கு முன்னர் நீங்கள் பயணித்த அதேபாதையிலேயே பயணிக்கிறீர்கள் என்பது இதன் அர்த்தமா? மீண்டும் அரசியலுக்கு வரப்போகின்றீர்களா என்ற கேள்விக்கு

இதனை தீர்மானிப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பொறுத்தவிடயம். அவர்கள் தாங்கள் பொதுமக்களை செவிமடுக்கப் போகின்றனரா, பொதுமக்கள் கோருவதை வழங்கப்போகின்றனரா என்பதை தீா்மானிக்க வேண்டும்.

நான் ஓய்வுபெற்றதாக இதுவரை தெரிவிக்கவில்லை, அவ்வாறு சிந்திப்பதாக தெரிவிக்கவுமில்லை என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள் என்றும் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பெருமளவான மக்கள் அவரிற்கு எதிராக வாக்களித்ததை சுட்டிக்காட்டிய வேளை ராஜபக்ச சதித்திட்டம் என்பது சதிதிட்டமே, நீங்கள் அதனை எப்படி வெற்றியாக காண்பிக்க முயன்றாலும் அது சதியே என்று தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினத்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை புறக்கணித்ததே உங்களின் தோல்விக்கு காரணம் என கருதவில்லையா என்ற கேள்விக்கு- நான் இந்த வாக்காளர்களை சாதரணமாக கருதினே என குறிப்பிடுவது தவறான விடயம், முஸ்லீம்களின் வாக்களை இழப்பது குறித்தே நான் அதிக
கவலை கொண்டிருந்தேன்,

தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என முன்னரே எனக்கு தெரிந்திருந்தது என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏன் முஸ்லீம்களின் வாக்குகளை இழப்பதை தவிர்க்க முடியவில்லை என்ற கேள்விக்கு பொதுபலசேனா போன்ற சில அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லீம்மக்கள் என்னை பற்றியும், எனது அரசாங்கம் பற்றியும் பிழையான அபிப்பிராயத்தை கொண்டிருந்தனர். எதிர்கட்சியினர் இதனை சரியாக மதிப்பிட்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர் என குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் அமைச்சரவையில் ஆராய்ந்தவேளை அமைச்சர் சம்பிக்க ரணவக்க சீற்றமடைந்து பொதுபலசேனா மீது சிறுவிரல் கூட படக்கூடாது என தெரிவித்தார்.சம்பிக்கவும் அந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதை நான் மிகவும் தாமதமாகவே புரிந்துகொண்டேன்.

நான் வீதிகளை அமைத்தாலும், தங்கத்தை வாரியிறைத்தாலும் தமிழர்களின் ஒரு வாக்கு கூட கிடைக்காமல் செய்வேன் என ஒரு தமிழ் அரசியல்தலைவர் எனது முகத்திற்கு நேரே சபதம் செய்தார் அதனால் தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என்பதை நான்உணர்ந்திருந்தேன். என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஏன் உங்களை இவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு

கடந்த 30 வருடங்களாக தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள் நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

தங்களுக்கு விடுதலையை வழங்கிய அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா?

மேலும் தமிழ் குடும்பங்களில் ஒருவராவது வெளிநாட்டில் இருக்கின்றனர், இதனால் அவர்கள் இயல்பாகவே புலம்பெயர்ந்த அமைப்புகளின் செல்வாக்கில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ககானி வீரக்கோன் — விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்
Thanks to Madawalanews.com
Disqus Comments