Wednesday, April 1, 2015

சீகிரிய ஓவியத்தில் தனது பெயரை கிறுக்கிய மாணவிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

சீகிரியா குன்றிலுள்ள சுவரோவியம் மீது தனது  பெயரை எழுதியமையினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் யுவதியான உதயசிறிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

இது தொடர்பான அறிவிப்பினை நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ இன்றிரவு மேற்கொண்டார். மட்டக்களப்பு, சித்தாண்டியை சேர்ந்த 28 வயதுடைய இந்த யுவதி மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் கைத்தொழில் நிறுவனமொன்றில் பணியாற்றினார். வார விடுமுறையின் போது சக ஊழியர்களுடன் தம்புள்ள மற்றும் சீகிரியா பிரதேசங்களுக்கு கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி இவர் சுற்றுலா மேற்கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

தனது தலைமுடி கிளிப்பை பயன்படுத்தி தன் பெயரை சுவரோவியம் மீது எழுதிக் கொண்டிருக்கையில் அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். இந்த யுவதி சட்ட நடவடிக்கையின் நிமித்தம் தம்புள்ள நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் கடந்த மார்ச் 2ஆம் திகதி தம்புள்ள நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது குறித்த யுதவிக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சிறுமிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு பல அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோரி விடுத்தனர்.

இந்த நிலையில் இவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்றிரவு கையொழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - விடியல்.எல்கே.

Disqus Comments