வழமைக்கு மாறாக அல்லது இயற்கையை மீறி சில சம்பவங்கள் நாள்தோரும் பதிவாகிக் கொண்டேதான் உள்ளன. இப்படி இருந்தால்தான் அது மனிதன் என இலக்கணம் வகுத்திருக்கும் எமது சமூகம், அந்த விதிகளை மீறி நடக்கும் சில மனிதர்களை கடவுளுடனும் மதத்துடனும் தொடர்புபடுத்திவிட தவறுவதேயில்லை. இது இப்படியிருக்க, சாதாரண குழந்தைக்கு இருக்கவேண்டிய விதிகளை மீறி பிறந்த பெண் குழந்தையை விநாயகரின் அவதாரமாக பார்ப்பதில் ஒன்றும் தவறில்லையே!
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் பிறந்தை பெண் குழந்தை, யானையின் தும்பிக்கை போன்ற அமைப்பிலான மூக்குடன் பிறந்துள்ளமை அப்பகுதி மக்களிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழந்தை, இந்து மதத்தவர்கள் வழிபடும் கடவுள்களில் ஒருவரான விநாயகரின் உருவத்தைக் கொண்டுள்ளதால் அக்கிராம மக்கள் அனைவரும் பிறந்த குழந்தையை வணங்கி வருகின்றனராம். மரபணு மாற்றம் காரணமாகவே இந்த குழந்தை, இப்படி விசித்திரமாக பிறந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த குழந்தையின் கண்களுக்கிடையில் உள்ள இடைவெளி எப்போதும்போல இல்லாது சற்று தூரமாக உள்ளதுடன் மூக்கு மாத்திரம் யானையின் தும்பிக்கைபோன்று காட்சியளிக்கின்றது. இந்த பெண் குழந்தை அவரது குடும்பத்தின் 4ஆவது குழந்தையென்றும் இதற்கு முன்னர் பிறந்த குழந்தைகள் எவ்வித குறைபாடுகளுமின்றி ஆரோக்கியமாக பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 'இந்த குழந்தையை விநாயகப்பெருமான் எமக்கு கொடுத்த வரமாகவே நாம் பார்க்கின்றோம். இந்த குழந்தையை நாம் கடவுளாக எண்ணி வழிபட்டு வருகின்றோம். எமது ஊர் மக்கள் அனைவரும் தற்போது இந்தை குழந்தையை பார்ப்பதற்காககவே வீடு தேடி வருகின்றனர்' என குழந்தையின் மாமி முறையான ஒருவர், ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
அழகாக பிறந்த பெண் குழந்தைக்கு கள்ளிபால் கொடுத்து கொலை செய்யும் சமூகத்தில் மாற்று அங்கங்களுடன் பிறந்த பெண் குழந்தையை தெய்வமாக போற்றுவது பெருமைகொள்ள வேண்டிய விடயம்தான் என்பதாக கூறப்படுகின்றது.