எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கடந்த காலங்களில் பல தடவைகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்தார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சில உற்பத்திகளால் நட்டம் ஏற்படுவதாகவும் அவர்கள் அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டினார்.
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என சுரேன் படகொட கூறினார்.
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்காது, மாற்று வழியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியவற்றின் நட்டத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருட்கள் தொடர்பில் விலைச் சுட்டெண்ணை தயாரிக்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
புதிய விலைச் சுட்டெண் அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியது.