புத்தளம், கரம்பை சஃபா மர்வா மீள்குடியேற்றக் கிராமத்திலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை தனது வீடருகிலுள்ள உறவினர் வீடொன்றிற்கு நேற்று மாலை சென்றுள்ளது.
நீ்ண்டநேரம் குழந்தையைக் காணாத பெற்றோர் குழந்தையைத் தேடிய சந்தர்ப்பத்தில், அருகிலிருந்த வீடொன்றின் பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்திருப்பதை அவதானித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தை மீட்கப்பட்டு, புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இந்த சம்பவத்தில் உமர் ஃபாருக் பாத்திமா றிஸ்னா என்ற ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்தது.
நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற கிணறுகளில் குழந்தைகள் வீழ்ந்து உயிரிழந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றது.
இவ்வாறு அப்பாவிக் குழந்தைகள் பலியாகுவதைத் தடுப்பதற்கு பெற்றோர்களைப் போன்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம், பாதுகாப்பற்ற கிணறுகளில் வீழ்ந்து 3 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.